Thursday 5 May 2016

பிரண்டை துவையல்

பிரண்டை கொடியில் படரும் தாவரம். இதனைக் கையில் தொட்டால் அரிக்கும். நறுக்கும்போது கைகளில் நல்லெண்ணையை தடவிக் கொள்ள வேண்டும். பிரண்டையை நன்கு அலம்பிவிட்டு, தண்டுகளையும், அதிலுள்ள கணுக்களையும் நன்கு சீவி விட்டு, மேலுள்ள தோலியை நீக்கி நறுக்க வேண்டும்.
பிரண்டை சிறந்த மருத்துவ குணம் கொண்டது. அஜீரணம், வயிற்றுக் கோளாறுகள், மூல நோய், எலும்பு பலவீனம் போன்ற நோய்களை நீக்கும். வாரம் ஒருமுறை இதை துவையல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நலம் உண்டாகும்.

தேவை
இளசான சிறிய பிரண்டை துண்டுகள் -- 10
பச்சை மிளகாய் -- 2
இஞ்சி -- சிறு துண்டு
கொத்தமல்லி தழை -- சிறிய கட்டு
கறிவேப்பிலை -- 7,8 கொத்துகள்
பெருங்காயம் -- சிறு துண்டு
உளுத்தம் பருப்பு -- 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு -- 1 டீஸ்பூன்
மிளகு -- 2 டீஸ்பூன்
புளி -- பெரிய நெல்லிக்காய் அளவு
எள் -- 1/2 டீஸ்பூன்
வெல்லம் -- சிறு துண்டு
உப்பு -- தேவையான அளவு
எண்ணை -- வதக்க
செய்முறை
பிரண்டை அரிக்கும் தன்மை உள்ளது.
பிரண்டையை மேலுள்ள தோலியை முழுதுமாக நீக்கி சிறு துண்டுகளாக்கவும்.
எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயில் பெருங்காயம், உ.பருப்பு, க.பருப்பு, மிளகு வறுத்து எடுத்து அதில் பிரண்டையைப் போட்டு நன்கு வதக்கவும்.
அதிலேயே பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை லேசாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
உ.பருப்பு, க.பருப்பு தவிர மற்றவைகளை மிக்சியில் நைசாக அரைத்து, கடைசியில் பருப்புகளை சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
சாதத்தில் பிசைந்து மோர்க்குழம்பு, அப்பளத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.







 

2 comments:

  1. மிக அருமையாக சொன்னிர்கள்..நான் படித்ததத்தில் பிடித்தது ..
    சளி... காரணங்களும் விடுபட வழிகளும்!
    நோயில்லாத சுகமான வாழ்வை விரும்புபவர்களுக்கு manam.online/news/2016-MAY-06/Solutions-for-cold

    ReplyDelete