Saturday 11 January 2014

பொங்கலோ பொங்கல்

பொங்கல்  தமிழ்நாட்டின்  முதல்  முக்கிய பண்டிகை. நான்குநாட்கள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தமிழர் திருநாள். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பு. முதல்நாள் போகியன்று பழையன கழித்து புதிய எண்ணங்களை ஏற்கும் நாள்.

மறுநாள்  நம் உயிருக்கு ஆதாரமான  உணவு விளைவிக்க உதவும் சூரியனை போற்றி வணங்கும் நன்னாள்.

அடுத்து உழவுக்கு உதவும் மாடுகளுக்கு உயர்வு செய்யும் நாள்.அத்துடன் உடன்பிறந்த சகோதரர்களின் நலம் வேண்டி பெண்கள் வழிபடும் நாளும் கூட. கடைசி நாள் உறவினர் மற்றும்  நண்பர்களுடன் இன்பமாகக் கழிக்கும் காணும் பொங்கல் திருநாள்! தமிழ்ப் புலவரான திருவள்ளுவர் நாளும் அன்றே.

ஒரு பண்டிகை என்றாலே அதற்கான  தனிப்பட்ட  சமையல்களும் அவற்றிற்கு சிறப்பு சேர்ப்பவையே! இனிப்பில்லாத பண்டிகை ஏது?பொங்கல் தினங்களில் செய்யப்படும் சமையல் வகைகள் பற்றி பொதுவாக அந்நாளைய பெண்களுக்குத் தெரிந்திருக்கும். புதிதாகத் திருமணமானவர்கள், வெளி மாநிலம், நாடுகளில் வாழ்பவர்கள் விபரமாகத் தெரிந்து கொள்ளவே இங்கு எழுதுகிறேன்.

போகியன்று செய்யவேண்டிய முக்கியமான சமையல்....பச்சடி,பாயசம் , ஆமவடை, போளி ..மற்றபடி சாம்பார், ரசம் அவரவர் விருப்பம்.

பொங்கல் அன்று ...சர்க்கரைப் பொங்கல்,உளுந்து வடை எல்லா காய்கறிகளும் சேர்த்து செய்யும் எழுகறிக் குழம்பு இவை அவசியம்.சிலர் வெண் பொங்கலும் செய்வார்கள்.

பொங்கல் அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்து வாசலில் அவரவர்  பெரிய கோலங்கள், ரங்கோலி இவரைப் போடலாம்.கிராமங்களில் சூரியனுக்கு எதிரில் பொங்கல் வைக்கும் வழக்கம் உண்டு. தனியான வீடுகளில் முற்றம், கொள்ளையில் கிழக்கு நோக்கி கோலம் போட்டு பூஜை செய்து, பொங்கலை நைவேத்தியம் செய்வர்.இன்று நாம் இருப்பது தீப்பெட்டி ஃ பிளாட்டுகளில்!இங்கு எங்கே வாசலும், முற்றமும்? சுவாமி அறையில் இழைகோலமாக கிழக்கு நோக்கி ரதம் போல் வரைந்து, நடுவில் காவி இட்டு அதில் வடக்கில் சூரியனையும்,தெற்கில் சந்திரனையும்  வரைந்து பூஜிக்க வேண்டும்.அதற்கான கோலத்தை கீழே வரைந்துள்ளேன்.

கனுப்பண்டிகை அன்று பிசைந்த சாத வகைகள் செய்வது வழக்கம். ஆமவடை, கல்கண்டு சாதம் அல்லது சர்க்கரை சாதம் செய்யலாம்.
இவற்றை செய்யும் முறை கீழே.

போகி சமையல்
எந்தப் பாயசம் வேண்டுமானாலும்  செய்யலாம். நான் தேங்காய்ப் பாயசம் எழுதியுள்ளேன்.

தேங்காய் பாயசம்

தேவை 

தேங்காய்-1 மூடி,பாதாம் -10, வெல்லம் -1/4 கப், சர்க்கரை-1/2 கப், அரிசி-3 தேக்கரண்டி, ஏலக்காய்-5, மிந்திரி,திராட்சை-10, நெய்-3 தேக்கரண்டி, குங்குமப்பூ -3 இதழ்கள்.

செய்முறை:

அரிசியை சிறிதளவு நீரில் ஊற வைக்கவும். பாதாமை வெந்நீரில்  ஊற வைக்கவும். தேங்காயுடன், தோலி  நீக்கிய பாதாம், ஏலக்காய், ஊறிய அரிசி சேர்த்து மிக்சியில் 1/2 கப் நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடுப்பை சிம்மில் வைத்துக் கைவிடாமல் கிளறவும்.இல்லையெனில் அடிபிடித்து விடும். தேங்காய் பச்சை வாசனை போய் நன்கு வெந்ததும் அதில் வெல்லம், மற்றும் சர்க்கரையைச் சேர்க்கவும். சற்று கிளறி நன்கு சேர்ந்து கொண்டதும், நெய்யில் மிந்திரி, திராட்சை வறுத்துப் போடவும். குங்குமப்பூவை சேர்க்கவும். மணமான தேங்காய்ப் பாயசம் தயார்.ஆம வடை

தேவை: 

துவரம்பருப்பு-1/2 கப், கடலைபருப்பு-1/2கப், உளுத்தம்பருப்பு-1/4கப், பயத்தம்பருப்பு-3மேசைக்கரண்டி,சிறிய ஜவ்வரிசி-4தேக்கரண்டி ,மிளகாய் வற்றல்-6,பச்சைமிளகாய்-2, பெருங்காயம்-1/8தேக்கரண்டி, மஞ்சள்பொடி-2 சிட்டிகை,உப்பு-தேவையான அளவு, கறிவேப்பிலை ,எண்ணெய் வேகவிட

செய்முறை

ப.பருப்பு, ஜவ்வரிசியைத் தனியாக ஊறவைக்கவும்.து.பருப்பு, க.பருப்பு, உ.பருப்புகளை சேர்த்து நன்கு களைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும். 

அத்துடன் மி.வற்றல்,பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் சற்று கரகரப்பாக அரைக்கவும். அத்துடன் ஊறிய ப.பருப்பு, ஜவ்வரிசி, பெருங்காயம், மஞ்சள்பொடி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து எண்ணை காய்ந்ததும்  சிறிய வடைகளாகத் தட்டவும். 

இந்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ் சேர்த்தும்  தட்டலாம்.

போளி

தேவை

பூரணத்திற்கு...கடலைப் பருப்பு -1 கப்,வெல்லம்-11/2 கப், சர்க்கரை-1/4 கப்,தேங்காய்த் துருவல்-1/2 கப், ஏலப்பொடி-1/2 டீஸ்பூன்  
மேல்மாவிற்கு...மைதாமாவு-11/2கப், உப்பு-1சிட்டிகை, கேசரிபவுடர்-2 சிட்டிகை, நல்லெண்ணெய்-5 டேபிள்ஸ்பூன், நெய் 

செய்முறை

மைதாமாவுடன் உப்பு, கேசரி பவுடர்,,நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, தேவையான  நீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.-

கடலைப் பருப்பை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். வெந்தபருப்பில் தண்ணீரை வடித்துவிட்டு, அத்துடன் வெல்லம், சர்க்கரை, தேங்காயைப் போட்டு,வெள்ளம் கரைந்து சேர்ந்து கொள்ளும்வரை கிளறி இறக்கி ஆறவிடவும். மிக்சியில் நைசாக அரைக்கவும்.ஏலப்பொடி சேர்த்து கலக்கவும். பூரணம் கெட்டியாக இல்லாவிடில், ஒரு வாணலியில் 3 ஸ்பூன் நெய் விட்டு, அதில் பூரணத்தைப் போட்டு சற்று கிளறினால் கெட்டியாகிவிடும். அதை சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

ஒரு சிறிய இலை ஏட்டில் எண்ணெயைத் தடவிக்கொண்டு, பிசைந்த மாவை சிறு உருண்டை எடுத்து கையிலும் எண்ணெய் தொட்டுக்கொண்டு வட்டமாக தட்டி அதில் பூரண உருண்டையை வைத்து சுற்றிலும் இழுத்து மூடி, பூரணம் வெளியில் வராதவாறு வட்டமாகத் தட்டவும்.அடுப்பில் தோசைக் கல்லைக் காயவைத்து, அதில் போளியை இலையுடன் போடவும். உடன் இலையை மெதுவாகப் பிரித்து எடுக்கவும். இல்லை கிடைக்காவிட்டால் திக்கான பிளாஸ்டிக் பேப்பரில் இட்டு, மெதுவாகக் கையால் எடுத்துப் போடவும்.போளியை சுற்றி சிறிது நெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.மேலே சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.


No comments:

Post a Comment