தேவை
புளி - ஒரு ஆரஞ்சுப் பழம் அளவு (கையால் கெட்டியாகப் பிடித்து உருட்டிக் கொள்ள வும்)
தாளிக்க:
நல்லெண்ணெய்-- கால் கப்
பெருங்காயம்-- ஒரு சிறு கட்டி
கடுகு---டீஸ்பூன்
கடலைப் பருப்பு--- 6 டீஸ்பூன்
நிலக்கடலை--- 8 டீஸ்பூன்
கொண்டைக்கடலை --- கையால் கால் பிடி
மிளகாய் வற்றல் ---12 - 15
கறிவேப்பிலை -- 6 கொத்து
மஞ்சள்பொடி --1 டீஸ்பூன்
வறுத்து பொடி செய்ய:
கருப்பு அல்லது வெள்ளை எள்--- 2 டீஸ்பூன்
தனியா ----4 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்--- 3
மிளகு --2 டீஸ்பூன்
வெந்தயம் ---1 டீஸ்பூன்
உப்பு--- தேவையான அளவு
செய்முறை
புளியை வென்னீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். புளியை 2½ கப் நீரில் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
பாதியளவு எண்ணையைக் காயவைத்து அதில் பெருங்காயம் போட்டுப் பொரிந்ததும், கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் கடலைப் பருப்பைப் போட்டு சிவக்க ஆரம்பிக்கும்போது நிலக்கடலை, கொண்டக்கடலைகளைப் போட்டு நன்கு வறுபட்டதும் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு கருகாமல் வதக்கி, அதில்,கறிவேப்பிலை,மஞ்சள் பொடி சேர்க்கவும். கரைத்த புளியை விட்டுக் கிளறவும்.
நன்கு கொதித்து கெட்டியாக வேண்டும். அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறவும். இல்லையெனில் அடி பிடித்து விடும். தேவையான உப்பை சேர்க்கவும். கொதிக்கும்போது மீதி எண்ணையைச் சேர்க்கவும்.
வெறும் வாணலியில் வெந்தயம் போட்டு சிவந்ததும், அதில் அரை ஸ்பூன் மஞ்சள்பொடி சேர்த்து பொடி செய்யவும்.
வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும். அதை எடுத்து விட்டு 2 ஸ்பூன் எண்ணை விட்டு அதில் தனியா,மிளகாய் வற்றல், மிளகு வறுத்து எல்லாம் சேர்த்துப் பொடி செய்யவும்.
புளிக்காய்ச்சல் நன்கு எண்ணை பிரிந்து கெட்டியானதும் இறக்கவும். அதில் வெந்தயம், மஞ்சள்பொடி, தனியாபொடி சேர்த்துக் கலக்கவும்.
சாதம் ஆற வைத்து கலக்கவும். மேலும் ரிச்சாக்க வறுத்த முந்திரி சேர்க்கவும்.
இதை 10 நாட்கள் வைத்துக் கொள்ளலாம். எண்ணை பிரிந்து கெட்டியாக ஆகிவிட்டால் பிரிட்ஜில் கூட வைக்க வேண்டாம்.