திங்கள், 29 பிப்ரவரி, 2016

மிஷ்டிதோய்

 மிஷ்டிதோய் ( வங்காளம் )

வங்காளத்தில் பாலால் செய்யப்படும் ரசகுல்லா, குலாப் ஜாமூன் இவை மிகப் பிரசித்தம். இது ஒரு வித்தியாசமான சுவையுள்ள சுலப இனிப்பு.

தேவை

பால் – 1 லிட்டர்
தயிர் – 25 கிராம்
சர்க்கரை – 150 கிராம்.

செய்முறை:

காஸை சிம்மில் வைத்து பாலை நன்கு காய்ச்சவும். அடிக்கடி கிளறி விடவும். பாலின் அளவு பாதியாக வற்றி, பழுப்பு நிறமானதும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து சற்று கொதித்தபின், ஒரு அகலமான காஸரோலில் கொட்டி ஆறவிடவும். வெதுவெதுப்பான சூட்டில் தயிரை சேர்த்து மூடி, அசையாமல் 10 மணி நேரம் வைத்து, பின் ஃபிரிட்ஜில் வைத்து, கப்பில் குளிர்ச்சியாக பரிமாறாவும்.
(மேலே சிறு துண்டுகளாக்கிய பாதாம், மிந்திரி சேர்க்கலாம்.)

நெய் அப்பம்

நெய் அப்பம் ( கேரளா)

தேவை

அரிசி மாவு – 1 கப்
வெல்லம் – 1 கப்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/8 கப்
பேகிங் பவுடர் – சிட்டிகை
நெய் அல்லது எண்ணெய் வேகவிட.

செய்முறை

வெல்லத்தைப் பொடியாக்கி,1/2 கப் நீரில் போட்டு அடுப்பில் வைத்து கரைத்தபின் வடிகட்டவும். அதில் அரிசி மாவு, மைதா, தேங்காய்த் துருவல், பேகிங் பவுடர், ஏலப்பொடி, 4 டீஸ்பூன் நெய் சேர்த்து தோசை மாவு பதமாக கரைக்கவும். தேவையெனில் நீர் சேர்க்கவும். அடுப்பில் நெய் அல்லது எண்ணெய் வைத்துக் காய்ந்ததும் கரைத்த மாவை ஒரு சிறு குழிக் கரண்டியால் எடுத்து விட்டு, நன்கு உப்பி வெந்ததும் எடுக்கவும். இதை குழிப் பணியாரத் தட்டில், சின்னக் குழியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, மேலே மாவு விட்டு, மேலாக 2 டீஸ்பூன் நெய் விட்டு, மேலே ஒரு மூடியால் மூடி, அடுப்பை சிறிதாக வைக்கவும். மேல் பாகம் வெந்ததும், ஒரு சிறிய ஸ்பூனால் குழி அப்பத்தை திருப்பி விட்டு, மேலும் 2 டீஸ்பூன் நெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும். சுவையான நெய் அப்பம் தயார்! 


சக்கர்பாரா

சக்கர்பாரா (உத்திர பிரதேசம்)

தேவை

கோதுமை மாவு - 1/4 கிலோ
சீனி - 1/2 கிலோ
எண்ணெய் வேகவிட
நெய் – 6 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மாவுடன் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளும்படி பிசறவும். பின் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டி கம்பி பாகு செய்யவும். மாவை நன்கு அழுத்திப் பிசைந்து சற்று தரமான ரொட்டியாக இட்டு, அதனை சோமாசிக் கரண்டியால் சின்ன சதுரம் அல்லது டைமண்ட் வடிவில் வெட்டி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்து, சீனிப்பாகில் போட்டு, சில நிமிடங்கள் ஊறியதும் எடுத்து தட்டில் பரவலாகப் போடவும். மீதி மாவையும் இதே முறையில் செய்து ஆற விடவும். மேலே வெளுப்பான சர்க்கரை பூச்சுடன் ‘சக்கர் பாரா’ ருசியாக இருக்கும்.


காஜு பட்டர் குக்கீஸ்

காஜு பட்டர் குக்கீஸ்
தேவை

மைதா ---3 கப்
மிந்திரி பொடி  ---1/2 கப்
வெண்ணை அல்லது டால்டா --1 1/4 கப்
பொடித்த சர்க்கரை --1 கப் 
ஏலப்பொடி --1 தேக்கரண்டி 

செய்முறை

வெண்ணையுடன் மைதா, மிந்திரி பொடி ,சர்க்கரை பொடி, ஏலப்பொடி சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசையவும்.

சப்பாத்திக் கல்லில் அரை அங்குல கனத்திற்கு சப்பாத்திகளாக இடவும்.

சிறு பாட்டில் மூடிகளை வைத்து வட்டங்கலாகக் கத்திரிக்கவும்.

அவற்றை மைதா தூவிய தட்டுகளில் அடுக்கி பிஸ்கட் ஓவன் அல்லது குக்கரில் மணல் போட்டு பேக் (bake) செய்யவும்.

பேக் செய்யுமுன் ஒவ்வொரு பிஸ்கட் நடுவிலும் ஒரு  பாதாம் பருப்பை வைத்து அமுக்கி பேக் செய்யவும்.

சுவையான பட்டர் பிஸ்கட் அனைவரும் சாப்பிட ஏற்றது.


மைசூர்பா

மைசூர்பா

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
நெய் – 2 1/2 கப்

செய்முறை:

*  கடலை மாவை நன்கு சலித்து, மிக லேசாக 2, 3 நிமிடங்கள் மட்டும் வறட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.

*        நெய்யை லேசான தீயில் நன்றாக உருக்கி வைத்துக் கொள்ளவும்.

*  சர்க்கரையை சிறிது நீர் சேர்த்து, அடுப்பில் சிம்மில் வைத்து, முழுவதையும் கரைய விடவும். கரைவதற்கு முன் சூடு அதிகமானால் பாகு ஆகிவிடலாம். அதனால் தீயை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து முழுமையாகக் கரைக்க வேண்டும்.

* சர்க்கரை கரைந்ததும், கடலைமாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும். சலித்து வறுத்திருப்பதால் பெரிய பிரச்சினை ஆகாமல் கலந்துவிடும்.

* மாவு கலந்து கொதிக்கத் தொடங்கியதும், நெய்யை நான்கைந்து பாகங்களாக தவணை முறையில் இறுக இறுக சேர்த்துக் கிளறவும்.

*  கடைசியில் எல்லா நெய்யும் சேர்த்தபின், கிளறிக்கொண்டே இருக்கையில் சேர்ந்தாற்போல் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விடவும்.

*        சிறிது நெய் தடவிய தட்டையான கரண்டியால் தடவினால் மேல்பாகம் வழவழப்பாகிவிடும்.

*        நன்கு ஆறியதும் கத்தியால் கீறி வில்லைகள் போடலாம். கடைகளில் கிடைப்பதுபோல் நீள் சதுரமாகவோ, வழக்கமான சதுரங்களாகவோ தான் செய்ய வேண்டும் என்றில்லை. பிள்ளையாருக்கான சின்ன மோதக அச்சில் கூட வார்த்து எடுக்கலாம். எல்லாவற்றிற்கும் எவ்வளவு நேரமானலும் கலவை வளைந்து கொடுக்கும். வாயில் கரையும்.

*        சுத்தமான நெய்யில் மட்டும் தான் செய்ய வேண்டும். மைசூர்பாகிற்க்குச் செய்வது போல் டால்டா உபயோகிக்கக் கூடாது.

* அதிகம் நெய்க்கு பயந்தவர்கள், 2 பங்கு மட்டும் நெய் சேர்த்தும் செய்யலாம். பெரிய வித்தியாசம் தெரியாது.
 


ஸ்பைசி தோசை

 ஸ்பைசி தோசை 
தேவை

பச்சரிசி – 1 /2 கப்
துவரம்பருப்பு – 1 /4 கப்
தேங்காய் – 1 /2 மூடி
மிளகாய் வற்றல் – 4
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகு – 10
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – சிறு துண்டு
 வெங்காயம் -- 1​ ​ 
மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிது

செய்முறை :

அரிசி, பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

இதனுடன் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிய ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெயில் கடுகு தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் கொட்டி கலக்கவும். தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

மாவில் பொடியாக அரிந்த வெங்காயம், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து தோசை  வார்க்கவும்.


அதிரசம்

அதிரசம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு கிலோ
வெல்லம் - 3/4 கிலோ
ஏலக்காய் - 6

செய்முறை:

1.  ஒரு பாத்திரத்தில் பச்சரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு எடுத்து களைந்து சுத்தம் செய்துக் கொள்ளவும். தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு ஒரு காட்டன் துணியை விரித்து அதில் அரிசியை போட்டு பரப்பி விட்டு நிழலில் 20 நிமிடம் உலரவிடவும்.

2.  அரிசி நன்கு காய்ந்து விடாமல் லேசான ஈரப்பதம் இருக்கும் போதே எடுத்து விடவும். பிறகு மிக்ஸியில் சிறிது சிறிதாக அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து சல்லடையில் சலித்துக் கொள்ளவும். சல்லடையில் மீதம் இருக்கும் மாவையும் மிக்ஸியில் போட்டு மீண்டும் அரைத்து சலித்துக் கொள்ளவும்.

3.  பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தூள் செய்து போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் பாகின் சுவை நன்றாக இருக்கும்.

4.  பாகின் பதம் தெரிந்துக் கொள்ள ஒரு தட்டில் தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது பாகை எடுத்து ஊற்றினால் கரையாமல் இருக்க வேண்டும், கையில் எடுத்து ஒன்று சேர்த்து பார்த்தால் விரலில் ஒட்டாமல் முத்து போல் வரவேண்டும்.

5.  ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவைக் கொட்டி அதில் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். அதில் வெல்லப் பாகை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்.

6.  ஒரே முறையில் அனைத்து பாகையும் கொட்டிவிடாமல் சிறிது சிறிதாக சேர்த்து, ஒரு ஸ்பூன் அல்லது கரண்டி கொண்டு கைவிடாமல் கிளறவும். மாவும் வெல்லமும் ஒன்றாக சேரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

7.  நன்கு கிளறிய பிறகு, அதனை அப்படியே பாத்திரத்தில் வைத்து சுமார் இரண்டு நாட்கள் ஊற வைக்கவும். மாவு அப்போதுதான் புளித்து பதமாய் வரும்.

8.  இரண்டு நாட்களுக்கு பிறகு, வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும். ஒரு ப்ளாஸ்டிக் கவரின் மீது சிறிது எண்ணெய் தடவி, அதில் எலுமிச்சை அளவு மாவு எடுத்து வைத்து, கைகளால் வட்ட வடிவில் தட்டையாக தட்டவும்.

9.  பிறகு அதனை எடுத்து எண்ணெய்யில் போட்டு வேக வைக்கவும். தீயை அதிகம் வைக்காமல் மிதமான தீயில் வேக விடவும்.

10.            சற்று பொன்னிறமாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு வேகவைத்து, இரண்டு புறமும் சற்று சிவந்தவுடன் எடுத்து எண்ணெய் வடியவிடவும். வாணலியில் உள்ள எண்ணெய்யின் அளவைப் பொறுத்து ஒரு முறைக்கு இரண்டு, மூன்று போட்டு எடுக்கலாம். ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாதவாறு பார்த்து செய்யவேண்டும்.


11.            அதிகம் சிவக்க விடாமல் எடுத்து விடவும். அதிரசம் மொறுமொறுப்பாக இருக்கக் கூடாது.

மல்டி-தால் வெஜிடபிள் பொங்கல்

மல்டி - தால் வெஜிடபிள் பொங்கல்
தேவை

பச்சரிசி - 1 கப்
துவரம் பருப்பு -  1/8  கப்
பாசிப்பருப்பு -  1/8  கப்
கடலை பருப்பு -  5 டீஸ்பூன்
தக்காளி - 2
கேரட் - 1
குடமிளகாய் - 1
நறுக்கிய கோஸ் -  1/4  கப்
நறுக்கிய பீன்ஸ் -  1/4  கப்
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை, கொத்துமல்லி
பெருங்காயத் தூள் - 3 சிட்டிகை
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
நெய் - 4-5 டீஸ்பூன்
பால் - 1/4 கப்
உப்பு

செய்முறை

சிறிய குக்கர் அல்லது ப்ரெஷர் பேனில் நெய் ஊற்றி சீரகம் , மிளகுத்தூள், பெருங்காயம் , பச்சை மிளகாய் , கறிவேப்பிலை , கொத்துமல்லி , தக்காளி எல்லாம் போட்டு வதக்கவும்.

பிறகு குடமிளகாய், கோஸ், கேரட், பீன்ஸ் எல்லாம் போட்டு தேவையான  உப்பு போட்டு 4 கப் தண்ணீர், பால்  ஊற்றி , அரிசி + பருப்பு வகைகளை போட்டு, குக்கரை மூடி,  5 விசில் வைக்கவும். குக்கர் ஆறியதும் திறந்து (விருப்பப்பட்டால் நெய்யில் முந்திரி தாளித்து ) கிளறிவிட்டு, தேங்காய் / வெங்காய சட்னியுடன் பரிமாறவும்


ஐந்தரிசி பேரீச்சை பொங்கல்

ஐந்தரிசி பேரீச்சை பொங்கல்

பச்சரிசி, வரகரிசி, குதிரைவாலி, சாமை, தினைஅரிசி எல்லாம் சம அளவில் ஒரு கப் (each 1/5) எடுத்து லேசாக வறுக்கவும்.

ப.பருப்பு, மைசூர் பருப்பு இரண்டும் சம அளவில் 1/4 கப் லேசாக வறுத்து அரிசியுடன் சேர்த்து 1 1/2கப் தேங்காய்ப்பால், 21/2கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

2 ப.மிளகாய், சிறுதுண்டு இஞ்சி, 6 மிந்திரி, 1/2 ஸ்பூன் கசகசா, 1 தக்காளி சேர்த்து அரைக்கவும்.

4 ஸ்பூன் நெய்யில் இஞ்சித் துண்டுகள், 8 மிளகு, 1/2 ஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை வதக்கி பொங்கலில் சேர்க்கவும்.மேலும் 2 ஸ்பூன் நெய்யில் மிந்திரி, திராட்சை,சிறு துண்டுகளாக்கிய( 6) பேரீச்சை வறுத்து அதிலேயே அரைத்த விழுது சேர்த்து சற்று வதக்கி பொங்கலில் கொட்டி தேவையான உப்பு,பெருங்காயப்பொடி சேர்த்து ஐந்து நிமிடங்கள்  நன்கு கிளறவும்.


சுவையான ஐந்தரிசி  டேட்ஸ் பொங்கல் ரெடி!

பாதாம் கேசர் பொங்கல்

பாதாம் கேசர் பொங்கல்

தேவை

அரிசி....1கப்
ப.பருப்பு...1/4 கப்
பாதாம்...10
மிந்திரி....20
சகசா...1/4 டீஸ்பூன்
பிஸ்தா...10 
திராட்சை...10
பால்....1/2 கப்  
தேங்காய்ப்பால்.....1/2 கப்
கல்கண்டு....1 1/2 கப்
ஏலப்பொடி....சிறிது
குங்குமப்பூ....சில இதழ்கள்
நெய்....1/8கப்                                  

செய்முறை

பாதாம், கசகசா, 10 முந்திரி சேர்த்து நைசாக அரைக்கவும்.

அரிசி, ப.பருப்பை 1 ஸ்பூன் நெய்யில் சற்று வறுத்து 3 கப் நீர், பால் சேர்த்து குக்கரில் வேகவிடவும்.

குக்கரிலிருந்து எடுத்து அத்துடன் தேங்காய்ப்பால், அரைத்த பொடி சேர்த்து கேஸில் வைத்து 5 நிமிடம் கிளறி சேர்ந்து கொண்டதும் அதில் கல்கண்டைப் பொடி செய்து சேர்த்துக் கிளறவும்.

கொஞ்சம் கெட்டியானதும் நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.

ஏலப்பொடி சேர்த்து மீதமுள்ள முந்திரி,பேரீச்சை,   திராட்சை,பிஸ்தா  வறுத்துப் போடவும். குங்குமப்பூவை சூடாக இருக்கும்போதே போட்டு கலக்கவும்.

சுவையான, ரிச்சான பாதாம் கேசர் பொங்கல் தயார்.





ட்ரை - ஃப்ரூட்ஸ் ஸ்வீட் பொங்கல்

ட்ரை - ஃப்ரூட்ஸ்   ஸ்வீட் பொங்கல்
தேவை

அரிசி - 1 கப்
கடலை பருப்பு - 2 tbsp
காய்ச்சிய பால் - 2 கப்
முந்திரி - 5
பாதாம் - 5
பேரீச்சை - 5
உலர் திராட்சை - 2 tsp
நெய் - 3 tbsp
சர்க்கரை - 1 கப்

செய்முறை

அரிசி மற்றும் கடலை பருப்பை வாசனை வரும் வரை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும். பாலை திக்காக  நன்கு காய்ச்சி கொள்ளவும். பேரீச்சை, உலர் திராட்சை மற்றும் ஊற வைத்த முந்திரி - பாதாமை மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வெண்கலப்பானை அல்லது வாணலியில் 1 கப் பால் + 2 கப் தண்ணீர் விட்டு , கொதித்ததும், அடுப்பை sim ல் வைத்து , பொடித்ததைப் போட்டு கட்டிகள் இல்லாமல் கிளறவும். நன்றாகக் குழைந்து வெந்த பின் சர்க்கரை சேர்த்து கிளறவும். பிறகு அரைத்த விழுதை கொட்டி இரண்டு நிமிடங்கள் கிளறி , மீதி 1 கப் பாலை சேர்த்து கலக்கவும். பால் எல்லாம் நன்றாக உறிஞ்சிய பிறகு அடுப்பை அணைத்து மேலாக நெய்யை ஊற்றி கிளறவும். (விருப்பப்பட்டால் நெய்யில்  முந்திரி தாளிக்கலாம்).