ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

30 வகை முறுக்கு


✸அவல் முறுக்கு

தேவையானவை:
அவல் – 2 கப், கோதுமை மாவு (அ) மைதா மாவு – கால் கப், கெட்டியான மோர் – 2 கப்,
உப்பு, எள், எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
அவலை நன்றாகக் கழுவி மோருடன் கலந்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் எடுத்து
உப்பு சேர்த்து முறுக்கு பிழியும் அளவுக்கு கெட்டியாக அரைத்து, கோதுமை மாவு, எள்ளை சேர்க்கவும். அதை
முறுக்கு அச்சில் போட்டு, ஒரு துணியில் பிழியவும். இரண்டு அல்லது மூன்று முறை திருப்பிப் போடவும். ஈரம்
சிறிது காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

 ✸வெண்ணெய் முறுக்கு

தேவையானவை:
 கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு – தலா ஒன்றேகால் கப், சோடா உப்பு – 2 சிட்டிகை,
வெண்ணெய் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:
 கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு மூன் றையும் சுத்தம் செய்து உப்பு, வெண்ணெய், சோடா
உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசையவும்.
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும்.

✸ கோயில் முறுக்கு

தேவையானவை:
 இடித்த பச்சரிசி மாவு – 4 கப், வெண்ணெய் – கால் கப், பொட்டுக்கடலை மாவு – 4 டீஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் –
தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசி மாவு, வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், மிளகாய்த்தூள்
எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
அந்த மாவில் சிறிது எடுத்து, 3 அங்குல நீளத்துக்கு உருட்டி, இரண்டு முனைகளையும் இணைக்கவும். இதே
போல் எல்லா மாவையும் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மாவை உருட்டி வெகு நேரம் வைத்திருந்தால் காய்ந்து உடைந்து விடும். அதனால், சிறிது ஈரப்பசை
இருக்கும்போதே பொரித்தெடுக்க- வேண்டும்

 ✸மைதா முறுக்கு

தேவையானவை:
மைதா மாவு – 2 கப், உளுந்து பொடி – 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
மைதா மாவை வெள்ளைத் துணியில் சுற்றி, ஆவியில் வைத்து எடுத்து உளுந்து பொடி,
வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும். பிசைந்த மாவை பெரிய கண் உள்ள முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த
எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.
கோதுமை மாவு முறுக்கு

தேவையானவை:
 கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – அரை கப், சீரகம் – கால் டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 கோதுமை மாவையும் அரிசி மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, சீரகம், வெண்ணெய்,
பெருங்காயத்-தூள், தேவையான தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை, முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழியவும். பொன்னிறமாக வெந்தவுடன்
வடித்-தெடுக்கவும்.

✸ மரவள்ளிங்கிழங்கு முறுக்கு

தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு மாவு – ஒரு கப், அரிசி மாவு, கடலை மாவு – தலா கால் கப்,
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எள் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் –
தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எல்லா மாவுகளையும் போட்டு எள், மிளகாய்த்தூளை சேர்க்கவும். உப்பு,
பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து மாவு கலவையில் ஊற்றி, முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து
கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை முறுக்கு குழாயில் போட்டு பிழிந்து, பொன்னிறமாக
பொரித்து எடுக்கவும். எள்ளுக்குப் பதில் ஓமம் சேர்த்தும் செய்யலாம்.
மரவள்ளிக்கிழங்கு மாவு கிடைக்கவில்லை என்றால் மரவள்ளிக்-கிழங்கை வேக வைத்து தோலுரித்து, முறுக்கு
மாவு பதத்தில் கெட்டியாக அரைத்துக் கொள்ளலாம்.

 ✸இனிப்பு முறுக்கு

தேவையானவை:
உளுந்து – ஒரு கப், மாவு அரிசி – அரை கப், எண்ணெய் – தேவையான அளவு, வெல்லம் – ஒரு கப்

செய்முறை:
உளுந்து, அரிசி இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து
கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும். இருபுறமும் வெந்ததும் எடுத்து ஆற விடவும்.
வெல்லத்தைப் பொடித்து, சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். அதை ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றி,
அடுப்பில் வைத்து பாகு உருட்டும் பதத்தில் காய்ச்சவும். அதை பொரித்து வைத்துள்ள முறுக்குகளின் மேல்
ஊற்றிக் கிளறவும்.
இது, ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

 ✸ரவா தேன் குழல்

தேவையானவை:
ரவை – ஒரு கப், தேங்காய் துருவல் – அரை கப், கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன், மிளகு,
சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் ரவை, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து கிளறி
இறக்கவும். பிறகு கோதுமை மாவு, மிளகு, சீரகத்தை பொடி செய்து சேர்த்துப் பிசையவும். வாசனைக்காக சிறிது
தேங்காய் எண்ணெயைச் சேர்க்கவும்.
பிசைந்த மாவை தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெய் காய்ந்ததும் பிழியவும். நன்றாக வேகவிட்டு எடுக்கவும்.

✸ முள் முறுக்கு

தேவையானவை: அரிசி – 3 கப், கடலைப்பருப்பு – ஒரு கப், பயத்தம்பருப்பு – கால் கப், எள் (தேய்த்து
காய்ந்தது), சீரகம், கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு, வெண்ணெய் – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, உப்பு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 அரிசி, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு மூன்றையும் மிஷினில் மாவாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவுடன் உப்பு, பெருங்காயத்தை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு, வெண்ணெய், எள், சீரகம்
சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.
முறுக்கு அச்சில் முள் முறுக்கு அச்சை வைத்து, அதில் மாவைப் போட்டு காய்ந்த எண்ணெயில் பிழியவும்.
பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

 ✸பயத்தம்பருப்பு முறுக்கு

தேவையானவை:
பச்சரிசி – 4 கப், பயத்தம்பருப்பு – ஒரு கப், வெண்ணெய் – சிறிய எலுமிச்சம்பழம் அளவு, எள்,
சீரகம், பெருங்காயம் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
அரிசி, பயத்தம்பருப்பை மிஷினில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் எள், சீரகம், வெண்ணெய்,
பெருங்காயம், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதத்தில் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயில்
பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

✸ மெட்டி முறுக்கு

தேவையானவை:
 அரிசி மாவு – 2 கப், மைதா மாவு – அரை கப், காய்ந்த மிளகாய், சீரகம், எண்ணெய் –
தேவையான அளவு, சன்ன ரவை – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – பெரிய எலுமிச்சம்பழம் அளவு, தேங்காய்
துருவல் – அரை கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
தேங்காய் துருவலுடன் 2 மிளகாயை வைத்து சற்று கரகரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு
பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, சன்ன ரவை, சீரகம், வெண்ணெய், உப்பு போடவும். அதில் அரைத்த
விழுதை சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவில் சிறிது எடுத்து, நீளமாக உருட்டி, பின் மெட்டியைப் போல இரண்டு சுற்று சுற்றி காய்ந்த
எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

 ✸புரொட்டீன் முறுக்கு

தேவையானவை:
 பயத்தம் பருப்பு – ஒரு கப், பச்சை பட்டாணி – அரை கப், வறுத்து அரைத்த உளுந்து மாவு –
கால் கப், பச்சரிசி மாவு – 4 கப், எள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பயத்தம்பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு வேக வைத்து ஆற விடவும். பச்சை
பட்டாணியை மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். வேக வைத்த பருப்பு, பட்டாணி விழுது, அரிசி மாவு, உளுந்து
மாவு, எள், உப்பு, மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் கெட்டியாகப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்கு அச்சில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழிந்து வேக விட்டு
எடுக்கவும். காய்ந்த பட்டாணியாக இருந்தால் முந்தைய நாள் இரவே ஊற வைத்து அரைக்க வேண்டும்.

 ✸புழுங்கலரிசி முறுக்கு

தேவையானவை:
புழுங்கலரிசி – 4 கப், பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், சீரகம் – அரை டீஸ்பூன், எள் – 2 டீஸ்பூன்
 வெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், ஊற வைத்த பாசிப்பருப்பு – ஒரு கைப்பிடி, மிளகு – அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். அதில்
பொட்டுக்கடலை மாவு, சீரகம், மிளகுத்தூள், எள், ஊற வைத்த பாசிப்பருப்பு, வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும்
வெள்ளை துணியின் மீது ஒரு டம்ளரை கவிழ்த்து, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து, டம்ளரை சுற்றி
கையினால் முறுக்கு சுற்ற வேண்டும். சுற்றிய முறுக்குகள் ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
சீரகம், மிளகுத்தூளுக்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

 ✸பச்சரிசி கார முறுக்கு

தேவையானவை:
பச்சரிசி மாவு – 4 கப், பொட்டுக்கடலை மாவு – ஒரு கப், உப்பு, மிளகாய்த்தூள், தண்ணீர்,
எண்ணெய் – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – சிறிதளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 4 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் உப்பு போட்டு, மெதுவாக
கொதிக்க ஆரம்பிக்கும்போது அரிசி மாவை கொட்டி, அடுப்பிலேயே வைத்துக் கிளறி, பின்னர் அடுப்பை
அணைத்து விடவும்.
இந்த மாவை தட்டில் போட்டு பிசைந்து, சூடு ஆறியதும் பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள் சேர்த்துப்
பிசையவும்.இந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து சுட்டெடுக்கவும்.

 ✸ஸ்பெஷல் தூள் முறுக்கு

தேவையானவை:
அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா ஒரு கப், சீரகம் – சிறிதளவு,
காய்ச்சிய எண்ணெய் – அரை கரண்டி, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, சீரகம் போட்டு
காய்ச்சிய எண்ணெயை ஊற்றி கலக்கவும்.
கலவையை உதிரியாக பிசைந்து, அடிக்கடி தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். பிறகு அந்த மாவை
முறுக்கு அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து, வெந்ததும் எடுக்கவும். இது தூள் முறுக்காக வரும்.

 ✸தயிர் முறுக்கு

தேவையானவை:
அரிசி – 3 கப், உளுத்தம்பருப்பு – அரை கப், உப்பு போட்டு அரைத்த பச்சைமிளகாய் விழுது –
கால் கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், புளித்த தயிர் – அரை கப், எள் – சிறிதளவு, எண்ணெய் – தேவையான
அளவு.

செய்முறை:
அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் மிஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன்
பச்சைமிளகாய் விழுது, நெய், எள், புளித்த தயிரை சேர்த்துப் பிசையவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து, தேன்குழல் அச்சில் போட்டு, எண்ணெயில் பிழியவும்.
பொன்னிறமானதும் எடுக்கவும்.

 ✸பச்சைப்பயறு முறுக்கு

தேவையானவை:
அரிசி மாவு – 2 கப், முளைவிட்ட பச்சைப் பயறு – அரை கப், மிளகாய்த்தூள்- ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான
அளவு, ஓமம் – சிறிதளவு.

செய்முறை:
முளைவிட்ட பச்சைப்பயறை குக்கரில் வேக வைத்து, ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக்
கொள்ளவும். இந்த விழுதுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய், உப்பு சேர்த்து பிசையவும்.
முறுக்கு குழலில் நட்சத்திர அச்சைப் போட்டு, பிசைந்த மாவை அதில் போட்டு சின்ன முறுக்குகளாகப் பிழியவும். வெந்ததும் எடுக்கவும்

 ✸சோயா தேன்குழல்

தேவையானவை: சோயா மாவு – 4 கப், அரிசி மாவு – ஒரு கப், வறுத்துப் பொடித்த உளுந்து மாவு – ஒரு
டேபிள்ஸ்பூன், நெய் – கால் கப், சீரகம் – 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
நெய்யை சூடாக்கிக் கொள்ளவும். சோயா மாவு, அரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு, சீரகம், நெய்
எல்லாவற்றையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும். மாவில்
சிறிதளவு சூடான எண்ணெயை ஊற்றிப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழியவும். பொன்னிறமாக
வெந்ததும் எடுக்கவும்.

 ✸சோயா முள் முறுக்கு

தேவையானவை:
 பொட்டுக்கடலை மாவு, சோயா மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், சீரகம் – 2 டீஸ்பூன், நெய்
- ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, சோயா மாவு, அரிசி மாவு, சீரகம், உப்பு போட்டு நன்றாக
கலந்து கொள்ளவும். அதில் நெய்யை போட்டுப் பிசறி, சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக பிசையவும்.
முறுக்குக் குழாயில் முள்ளு முறுக்கு அச்சைப் போட்டு, அதில் மாவை நிரப்பி எண்ணெயில் பிழிந்து பொரித்து
எடுக்கவும்.

 ✸சோயா ரிப்பன் முறுக்கு

தேவையானவை:
 சோயா மாவு – ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு – தலா அரை கப், எள், நெய் – தலா ஒரு
டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
எல்லா மாவுகளையும் சலித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, நெய்யை சூடாக்கி ஊற்றவும். அதில் எள்,
உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டுப் பிசைந்து கொள்ளவும்.
முறுக்குக் குழாயில் ரிப்பன் அச்சைப் போட்டு அதில் மாவை நிரப்பி, காய்ந்த எண்ணெயில் பிழியவும். நன்றாக
வெந்ததும் எடுக்கவும்.

 ✸திடீர் முறுக்கு

தேவையானவை:
 உளுத்தம்பருப்பு – அரை கப், அரிசி மாவு – இரண்டரை கப் (அரிசி, உளுந்து 5:1 என்ற
விகிதத்தில் இருக்க வேண்டும்), சீரகம் – 2 டீஸ்பூன், வெண்ணெய் – 2 டீஸ்பூன், காய்ச்சிய எண்ணெய் – அரை
டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை கழுவி, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். மூன்று
முறை விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு நன்றாக வெண்ணெய்போல் அரைக்கவும்
அரிசி மாவில் வெண்ணெய், உப்பு, காய்ச்சிய எண்ணெய், சீரகம் சேர்த்து நன்றாக பிசறவும். பிறகு அதில்
அரைத்த உளுந்து மாவை சேர்க்கவும். தேவையானால் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு
பதத்துக்குப் பிசையவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் மாவைப் போட்டு பிழியவும். இது, வெள்ளையாக
இருக்கும். சீரகத்துக்கு பதிலாக எள் சேர்த்தும் செய்யலா

 ✸உருளைக்கிழங்கு தேன்குழல்

தேவையானவை:
உருளைக்கிழங்கு – கால் கிலோ, வறுத்த உளுந்து மாவு – ஒரு டீஸ்பூன், வெண்ணெய் – 2
டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்துக் கொள்ளவும். அதை மிக்ஸியில் கெட்டியாக
அரைக்கவும். அதோடு உளுந்து மாவு, உப்பு, வெண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழியவும்.
சிவந்தவுடன் எடுக்கவும்.

 ✸வாழைக்காய் தேன்குழல்

தேவையானவை: வாழைக்காய் – 2, வறுத்த உளுந்து மாவு – 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
வாழைக்காயை வேக வைத்து, தோல் உரித்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் உளுந்துமாவு, பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு பதத்துக்கு பிசைந்து
கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தேன் குழல் அச்சில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழியவும்.
சிவந்ததும் எடுக்கவும்.

 ✸கருப்பட்டி முறுக்கு

தேவையானவை:
பச்சரிசி மாவு – 5 கப், வறுத்த உளுந்து மாவு – ஒன்றரை கப், எள் – 2 டேபிள்ஸ்பூன், நெய் –
2 டேபிள்ஸ்பூன், கருப்பட்டி – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு, எள், உப்பு, நெய் ஆகியவற்றைப் போட்டு
கலந்து கொள்ளவும். கருப்பட்டியை தூள் செய்து தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
அதில் மாவு கலவையை கொட்டிக் கிளறவும். ஆறிய பிறகு நன்றாகப் பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி
காய்ந்ததும், மாவை முறுக்குக் குழலில் போட்டு எண்ணெயில் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

 ✸பச்சரிசி ஜீரா முறுக்கு

தேவையானவை: பச்சரிசி – இரண்டரை கப், சர்க்கரை – 5 கப், உளுத்தம்பருப்பு – ஒரு கப், வெண்ணெய் – 2
டேபிள்ஸ்பூன், எள்- ஒன்றரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பச்சரிசியை தண்ணீரில் ஊற வைத்து கழுவி, நீரை வடித்து இடித்து சலித்துக் கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை வறுத்து ஆறிய பிறகு நைஸாக அரைத்துக் கொள்ளவும். இரண்டு மாவையும் ஒன்றாகக்
கலந்து, உப்பு, எள், வெண்ணெய், தண்ணீர் சேர்த்து, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குக் குழாயில் மாவைப் போட்டு எண்ணெயில் பிழிந்து
வெந்தவுடன் எடுக்கவும்.
சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சேர்த்து, 2 கம்பி பாகு பதத்தில் முற்றிய பாகு காய்ச்சவும்.
முறுக்கை ஓடித்து ஜீராவில் கொட்டி நன்றாகக் கிளறி விடவும். இளஞ்சூடாக இருக்கும்போதே உருண்டையாகப்
பிடிக்கலாம். அல்லது உதிர்த்து விட்டு உதிராகவும் வைக்கலாம்.

 ✸ வளைய முறுக்கு

தேவையானவை:
 பாசிப்பருப்பு – அரை கப், மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 2 கப்,
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். அரிசி மாவை கடாயில் போட்டு சிறிது சிவக்க
வறுக்கவும். அதில் உப்பு, மிளகாய்த்தூள், வெந்த பாசிப்பருப்பு சேர்த்து வேக விடவும். இந்தக் கலவை கெட்டியாக
வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதில் மைதா மாவை சேர்த்துப் பிசைந்து சிறு வளையங்களாக செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி

காய்ந்ததும், வளையங்களை அதில் போட்டு சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.

 ✸தேங்காய்ப்பால் முறுக்கு

தேவையானவை:
அரிசி மாவு – 2 கப், உளுத்தம்பருப்பு மாவு – 2 கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – ஒரு கப், சீரகம், மிளகு – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து மாவாக பொடிக்கவும். இதனுடன் அரிசி மாவு,
தேங்காய்ப்பால், உப்பு, பொடித்த மிளகு, சீரகம், வெண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
முறுக்கு அச்சில் மாவைப் போட்டு ஈரத்துணி மீது அல்லது பாலித்தீன் ஷீட்டில் சிறு சிறு முறுக்குகளாகப்
பிழியவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முறுக்குகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவையும் மணமும் அமோகமாக இருக்கும்.

 ✸மனோகரம்

தேவையானவை:
பாசிப்பருப்பு – ஒரு கப்,
 பச்சரிசி – 2 கப், உப்பு – அரை டீஸ்பூன், பல்லு பல்லாக நறுக்கிய
தேங்காய் – அரை கப், பொடித்த வெல்லம் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,

செய்முறை:
 அரிசி, பருப்பை நைஸாக அரைத்து, உப்பு, தண்ணீர், நெய் சேர்த்து நன்றாகப் பிசையவும். கடாயில்

எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேன்குழல் அச்சில் மாவைப் போட்டு பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.

வெல்லத்தை உருட்டும் பதத்தில் காய்ச்சவும். நொறுக்கி வைத்துள்ள தேன்குழலில் ஏலக்காய்த்தூள்,

தேங்காய்ப்பால் சேர்த்து, பாகை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறவும். பாகு நன்றாக கலந்தவுடன்

உருண்டையாகப் பிடிக்கலாம். இளம் சூடாக இருக்கும் போது தனித்தனியாக உதிர்த்தும் வைத்துக் கொள்ளலாம்.

 ✸நெய் முறுக்கு

தேவையானவை: பச்சரிசி மாவு – ஒரு கப், கடலை மாவு – கால் கப், ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
வெண்ணெய் – நெல்லிக்காய் அளவு, நெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
 பச்சரிசியை ஊற வைத்து இடித்து, சலித்து, காய வைத்துக் கொள்ளவும். இந்த மாவுடன் கடலை

மாவு, உப்பு வெண்ணெய், நெய், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அதில் தேவையான தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு
பதத்துக்குப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனுடன் வாசனைக்கு சிறிது நெய்யும் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், முள்

முறுக்கு அச்சில் மாவைப் போட்டுப் பிழியவும். வெந்தவுடன் எடுக்கவும்.

 ✸கை முறுக்கு

தேவையானவை: பிசுக்குள்ள பச்சரிசி – 2 கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன், எள்
- ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
கை முறுக்கு சுற்ற பிசுக்குள்ள அரிசியாக இருந்-தால் நல்லது. அரிசியை தண்ணீ-ரில் அரை மணி

நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு வெள்ளைத் துணியில் முடிந்து வைத்தால் தண்ணீர் வடிந்து விடும். பிறகு

அதை மிக்ஸியில் போட்டு மாவாக்கி நைஸாக சலிக்கவும். உளுத்தம்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அரைத்து சலித்துக்
 கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயத்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து பிசையவும்.

மாவு பதம் நன்றாக இருந்தால்தான் நன்றாக முறுக்கு சுற்ற முடியும். வெள்ளைத் துணி மேல் ஒரு பாட்டில்

மூடியை வைத்து, அதைச் சுற்றி முறுக்கு சுற்றவும்.

கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் ஒவ்வொரு முறுக்காக மெதுவாக எடுத்து நிதானமாக போடவும்.

முதலில் சடசடவென சத்தம் வரும். ஒரு பக்கம் வெந்ததும், முறுக்குகளைத் திருப்பிப் போட வேண்டும். வெந்த

முறுக்கு எண்ணெயில் மிதக்கும். சடசட சத்தம் அடங்கியதும், எண்ணெயை வடிய விட்டு முறுக்கை எடுக்கவும்.

தேங்காய் எண்ணெயில் செய்தால் மொறு மொறுப்பாகவும், மணமாகவும் இருக்கும்