திங்கள், 1 செப்டம்பர், 2014

வீட் ஹல்வா

தேவை 

சம்பா  கோதுமை-- 1 கப்


சர்க்கரை-- 21/2 கப்


நெய்-- 2 முதல்  2 1/4 கப் வரை


பாதாம்--  15


ஏலக்காய்  பொடி--- 1 தேக்கரண்டி


மிந்திரி  பருப்பு--- 20


எலுமிச்சை-- 1 மூடி


கேசரி  கலர்  பொடி--- 1/4 தேக்கரண்டி


குங்குமப்பூ- சிட்டிகை அளவு 
 

செய்முறை

கோதுமையை  முதல்  நாள்  இரவே  தண்ணீரில்  ஊற  வைக்கவும்.
மறுநாள்  காலையில்  மிக்ஸியில்  1  கப்  நீர் சேர்த்து அரைத்துப்  பாலை  ஒரு சல்லடையில்  வடிகட்டவும்.  மேலும்  இரண்டு  முறை  1/2  கப்  நீர்  சேர்த்து  பால்  எடுக்கவும்.  வடிகட்டிய  பாலை  3  மணி  நேரம்  அப்படியே  மூடி  வைக்கவும்.



பாதாமை  வென்னீரில்  ஊறவைத்து,  தோலி  நீக்கி சிறிதளவு  பாலுடன்  சேர்த்து  நல்ல  நைஸாக  அரைக்கவும்.


குங்குமப்பூவை சிறிதளவு  சூடான பாலில் ஊற வைக்கவும்.

அரைத்த  கோதுமைப்  பாலின்  மேல்  தெளிந்த  நீரை  வடித்து விடவும். கீழே  பால்  கெட்டியாக  இருக்கும். அத்துடன்  3-4  கப்  நீர்  சேர்த்து  நன்கு  கலக்கவும்.  அத்துடன்  கேசரி  பவுடரை  சேர்த்து  கலக்கவும்.





சர்க்கரையுடன்  1 கப்  நீர்  சேர்த்து  கம்பிப்  பதம்  வரும்  வரை  பாகாக்கவும்.

  
அதில்  கோதுமைப்பாலை    விட்டுக்  கிளறவும்.  பாலில்  அரைத்த  பாதாமையும்  சேர்க்கவும்.அடுப்பை சிம்மில் வைத்துக் கிளறவும்.
 






அடுப்பை சிம்மில் வைத்துக் கைவிடாமல்  கிளறவும்.  ஹல்வா  கெட்டியாகி,  நன்கு  பளபளப்பாக  வரும்.  அடியில்  ஒட்டும்போது    நெய்யை  உருக்கி  சிறிது  சிறிதாகச்  சேர்க்கவும்.



நெய்  பிரிந்து  வந்து  ஹல்வா  கெட்டியான  பின்பு,  ஏலப்பொடியை சேர்த்து, நெய்யில்  வறுத்த  மிந்திரி, பாலில் கரைத்த குங்குமப்பூ   சேர்க்கவும்.  எலுமிச்சை  சாறு  சேர்க்கவும். நன்கு கிளறவும்.






ஒட்டாமல்  வரும்போது,  நெய்  தடவிய  தட்டில்  கொட்டி,  ஆறியதும்  துண்டுகளாக்கவும். 




 சுவையான ஹல்வா ரெடி!





 சில குறிப்புகள்

கோதுமைப்பாலுடன்  3-4  கப்  நீர்  சேர்த்துக்  கிளறினால்தான்  நன்கு  வேகும். பாலை  விட்டதும்  கைவிடாமல்  கிளற  வேண்டும்.


எலுமிச்சை  ரசம்  பிழிவதால்  ஹல்வா கையில்  ஒட்டாமல்  நல்ல  ஷைனிங்காக  இருக்கும்.


ஹல்வா கிளறுவதற்கு சற்று  அதிக  நேரம்  பிடிக்கும்.  பொறுமையும்,  சற்று கூடுதலான கவனமும் இருந்தால்  எல்லாரும் சுவையான ஹல்வா செய்து எல்லோருக்கும்  ஹல்வா  கொடுத்துப் பாராட்டையும் பெறலாம்!!!



செவ்வாய், 6 மே, 2014

பனீர் பராத்தா..



தேவை

கோதுமை  மாவு--- 2 கப்

பனீர்-- 200  கிராம்

பெரிய  வெங்காயம்-- 2

சீரகம்-- 2 தேக்கரண்டி

மஞ்சள்பொடி--  1 தேக்கரண்டி

காரப்பொடி-- 2 தேக்கரண்டி

கரம்மசாலா-- 1 1/2 தேக்கரண்டி

பொடியாக  நறுக்கிய கொத்தமல்லி  தழை

எண்ணை-- தேவையான  அளவு

உப்பு-- தேவையான  அளவு




செய்முறை

கோதுமை மாவை  எண்ணை,  தண்ணீர்  சேர்த்து  சப்பாத்திக்கு  பிசைவது போல் கெட்டியாகப்  பிசைந்து  வைக்கவும்.




வெங்காயத்தைப் பொடியாகநறுக்கவும்.

பனீரை  காரட்  துறுவியில்  துறுவவும்.

சிறிதளவு  எண்ணையில்  சீரகம்  போட்டு  தாளித்து  அதில்  நறுக்கிய வெங்காயம் சேர்த்து  வதக்கவும். அதில்  மஞ்சள்  பொடி,  காரப்பொடி, கரம் மசாலா சேர்த்து கலந்து  அடுப்பிலிருந்து  இறக்கவும்.

 அதில்  துருவிய  பனீர்,  தேவையான  உப்பு,  கொத்தமல்லி  தழை  சேர்த்து நன்கு  கலந்து  சிறு  உருண்டைகளாக்கவும்.






பிசைந்த  மாவை  எலுமிச்சை  அளவு  எடுத்து,  அதை ஒரு  சிறிய  பூரி அளவு  இட்டு,  அதில்  பனீர்  பூரணம்  வைத்து  கனமான  பராத்தாகளாக இடவும்.

தவ்வாவில்  1  தேக்கரண்டி  எண்ணை  விட்டு,  அதில்  பராத்தாவைப் போட்டு, வெந்ததும் திருப்பிப்  போட்டு  மேலும் 1 தேக்கரண்டி  எண்ணை விடவும்.




நன்கு  வெந்ததும் எடுக்கவும். மேலே  சிறிது  வெண்ணை  தடவி ஊறுகாய், தயிருடன் பரிமாறவும்.

பராத்தாக்களுக்கு  ராய்த்தாவைவிடவெறும்  தயிர்தான் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.



வியாழன், 20 மார்ச், 2014

வாழைக்காய் பொடிமாஸ்

தேவை

வாழைக்காய்-- 2 (பெரியது)

காரட்--- 1


தேங்காய்த்துருவல்--- 1/4 கப்


எலுமிச்சம்பழம்--- 1


பெருங்காயப்பொடி--- 2 சிட்டிகை


எண்ணை-- 4 தேக்கரண்டி


கடுகு--- 2  தேக்கரண்டி


உளுத்தம்பருப்பு--- 3 தேக்கரண்டி


இஞ்சி-- சிறுதுண்டு


பச்சை  மிளகாய்--- 3


மிந்திரி  பருப்பு--- 8


உப்பு-- தேவையான  அளவு


கறிவேப்பிலை





செய்முறை 

வாழைக்காயை  துண்டுகளாக்கி  தண்ணீரில்  தோலி  உரியும்  பதத்திற்கு  வேகவிடவும். 

ஆறியதும்  காரட்  துருவியில்  மெலிதாகச்  சீவிக்  கொள்ளவும்.
 
காரட்டையும்  துருவவும்.

இஞ்சி,  பச்சைமிளகாயை  பொடியாக  நறுக்கவும். 


வாணலியில்  எண்ணை  விட்டு  அதில்  பெருங்காயம்,  கடுகு  தாளித்து  உளுத்தம்பருப்பு,  மிந்திரி  சேர்த்து  சிவந்ததும்,  நறுக்கிய  இஞ்சி,  பச்சை  மிளகாய்,  கறிவேப்பிலை  தாளிக்கவும். 

அதில்  துருவிய  காரட்  சேர்த்து  ஒரு  நிமிடம்  வதக்கி,  அத்துடன்  துருவிய  வாழைக்காய்,  தேவையான  உப்பு  சேர்த்து  நன்கு  கிளறவும். 

மேலே  தேங்காய்த்துருவல்  சேர்த்து  நன்கு  கலந்து  இறக்கவும். 



எலுமிச்சை  சாறு  பிழிந்து  கலந்து  பரிமாறவும்.  சாம்பார்,  வற்றல்  குழம்பு  சாதத்துடன்  சாப்பிட  இந்த  பொடிமாஸ்  நன்றாக  இருக்கும்.  விருந்துகளுக்கு  ஏற்றது  இது.  

இதையே  வாழைக்காயைத்  துருவாமல்  வேகவிட்டதை  கையால்  உதிர்த்தும்  செய்யலாம்.

வியாழன், 13 மார்ச், 2014

அறுசுவைக் குழம்பு

சனி, 8 பிப்ரவரி, 2014

பாதாம் குக்கீஸ்

தேவை
பாதாம் பவுடர்  - 150 கி. 

வெண்ணை - 200கி. 

மைதா -  300கி. 

முட்டை -2  

சர்க்கரை -75கி. 

வெனிலா எசன்ஸ் - 5-6  

உப்பு - 1 சிட்டிகை

மேலே தூவ பூரா சர்க்கரை - 50 கி.

செய்முறை
பாதாம் பவுடர் கிடைக்காவிடில் முழு பாதாம்களை வெந்நீரில் சற்று  ஊறவைத்து தோலி  நீக்கி நன்கு காயவைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும். 

பாதாம் பவுடர், மைதா,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 

அத்துடன் வெண்ணை, மஞ்சள் கரு, வெனிலா எசன்ஸ் கலந்து நன்கு பிசையவும். 

பிசைந்த மாவை அரை அடி நீளத்திற்கு சற்று கனமாக உருட்டி, பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

 

அதனை எடுத்து கத்தியால் சிறு வட்டங்களாக , அரை வட்டங்களாக, வேண்டிய வடிவங்களிலோ வெட்டவும்.


கேக் செய்யும் ஓவனை ப்ரிஹீட் செய்து, 150 டிகிரி cயில் 20-25 நிமிடங்கள் பேக் செய்யவும். வெளியில் எடுத்து மேலே பூரா சர்க்கரையை தூவி, ஆறியதும் எடுத்து வைக்கவும்.

இதையே பாதியளவு மிந்திரி பவுடர் சேர்த்தும் செய்யலாம்.

                                       சுலபமான, சுவையான குக்கீஸ் ரெடி!

  

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

பருப்பு பொடி

தேவை
துவரம்பருப்பு-- 1 கப் 

கடலைப்  பருப்பு--- 1/4 கப் 

மிளகாய்  வற்றல்-- 2 

மிளகு--  2 தேக்கரண்டி 

உப்பு--- தேவையான  அளவு

செய்முறை
துவரம்பருப்பு  மற்றும்  கடலைப்  பருப்பை  வெறும்  வாணலியில்  எண்ணையில்லாமல் சிவக்க  வறுக்கவும்.

பாதி  வறுக்கும்போதே  மிளகு,  மிளகாய்  வற்றலையும்  சேர்த்துக்  கொள்ளவும். 

இறக்கி  ஆறியதும் தேவையான  உப்பு  சேர்த்து மிக்ஸியில்  கரகரப்பாக  பொடி  செய்யவும்.  ரொம்ப நைஸாக  இருக்கக்  கூடாது. 

சாதத்தில்  நல்லெண்ணையோ,  நெய்யோ  சேர்த்து  இந்த  பருப்புப் பொடி  போட்டு  கலந்து  மோர்க் குழம்பு,  அப்பளத்துடன்  சாப்பிடவும்.  

இதில் பெருங்காயம் சேர்ப்பதில்லை. விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

சின்னச் சின்ன டிப்ஸ் !


 சமையலை  எளிதாக்க  சில  சின்னச்  சின்ன  டிப்ஸ் !

** ரசம்  மணமாக,  சுவையாக  இருக்க  வேண்டுமா?  ரசத்தில்  பருப்பு  ஜலம்  விட்டு  நுரைத்து  வரும்போதே   இறக்கிவிட  வேண்டும்.  கொதிக்க  விடக்  கூடாது. நெய்யில்  கடுகு  தாளிக்கும்போது  ஒரு  ஸ்பூன்  மிளகு  பொடியைப்  பொறித்து  சேர்த்தால்  எந்த  ரசமும் சூப்பர்தான்!


**வற்றல்  குழம்பு செய்யும்போது  நல்லெண்ணையில்  தாளித்து  அதிலேயே  தேவையான  சாம்பார்  போடி  போட்டு  வதக்கி  பின்  புளிஜலம்  சேர்த்து   குழம்பு  செய்தால்  தனி  வாசனையுடன்  ருசியும்  கூடுதலாக  இருக்கும்.

**வாழைக்காய்  பொடிமாஸ்  செய்யும்போது,  வேகவைத்த  வாழைக்காயை   உதிர்த்து  செய்யாமல்  கேரட்  துருவியில்  துருவி  சேர்த்தால்  கண்ணுக்கும்  விருந்து;  நாவுக்கும்  சுவை!  இத்துடன்  கேரட்டையும்  சீவிப்  போட்டு,  பச்சை  பட்டாணியை  வேக  வைத்து  சேர்க்க  மல்டி  கலர்  பொடிமாஸ்  உங்களுக்கு  பாராட்டை  வாங்கித்தரும்.

**வெல்லக்  கொழுக்கட்டைக்கு  மாவு கிளறுவது  பலருக்கும்  ஒரு  கடினமான  விஷயம். தண்ணீரைக்  கொதிக்க  வைத்து  அதில்  மாவை  அப்படியே  தூவி  செய்யும்போது  அது  கட்டி  தட்டிவிட்டால்  கொழுக்கட்டை  சொப்பு  செய்ய  வராது.  அரிசிமாவை  தண்ணீரில்  கெட்டியாகக்  கரைத்துக்கொண்டு , வாணலியில்  ஒரு  கரண்டி  நீரில்  சிட்டிகை   உப்பு,  ஒரு  ஸ்பூன்  பால்,    ஒரு  ஸ்பூன்   நல்லெண்ணெய்  சேர்த்து  கொதித்ததும்,  அதில்  கரைத்த  அரிசிமாவை  சேர்த்துக்  கைவிடாமல்  கிளறவும்.  கையில்  ஒட்டாத  பதம்  வந்ததும்  இறக்கி  ஒரு  பாத்திரத்தை  மேலே  கவிழ்த்து  மூடி  வைக்கவும்.  அரை  மணி  கழித்து  எண்ணையைக்  கையில்  தொட்டுக்  கொண்டு  நன்கு  பிசைந்து  கொழுக்கட்டை  சொப்பு  செய்தால்  விள்ளாமல்,  விரியாமல்  அருமையாக   செய்ய  வரும்.  மிக  சுலபமான  முறை  இது.

**மைசூர்பாகு  செய்யும்போது  கடலை  மாவை  பாகில்  அப்படியே  சேர்த்தால்  கட்டி  தட்ட     வாய்ப்புண்டு.  அதற்கு  பதிலாக  சிறிதளவு  நெய்யை  நன்கு  உருக்கி  அதில்  கடலை  மாவை  கலந்து  சேர்த்தால்  சுலபமாக  சேர்ந்து  கொள்ளும்.  நெய்யும்,  டால்டாவும்  சரியளவு  கலந்து  மைசூர்பாகு  செய்தால்  சுவையாக  இருக்கும்.

**கேசரிக்கு...வறுத்த  ரவையுடன்    வெந்நீரும், சிறிதளவு  சூடான  பாலும்  கலந்து  செய்தால்  சீக்கிரம்  வெந்து,  சுவையும்  கூடுதலாக   இருக்கும்.

**பருப்பு  உசிலிக்கு... ஒரு  கப்  துவரம்பருப்புடன்,  கால்  கப்  கடலைப்  பருப்பு  சேர்த்து  ஊறவைத்து,      மிளகாய்  வற்றல்,  உப்பு,  சேர்த்து  கெட்டியாக  அரைத்து   அதைக்  குக்கரில்  மூன்று  சத்தம்   வரும்வரை  வேகவிட்டு,  ஆறியதும்  மிக்சியில்  விப்பரில்  இருமுறை  சுற்றினால்  பூவாக  உதிர்ந்துவிடும்.  அதன்பின்  வாணலியில்  எண்ணெய்   விட்டு  உசிலி  செய்ய  சூப்பர்  டேஸ்டாக  இருக்கும்.

**வெல்லச்  சீடை.....இது  பலருக்கும்  சரியாக  வராத, காலை  வாரும்  ஒரு  பட்சணம்!  ஒன்று  உள்ளே வேகாது:  அல்லது  உதிர்ந்துவிடும். ஒரு  கப்  அரிசிக்கு  ஒரு  கப் வெல்லம்  என்ற  அளவில்  எடுத்துக்  கொள்ளவும். அரிசியை  நைசான  மாவாக  அரைத்து  வெறும்  வாணலியில்  சற்று  சிவக்க  வறுக்கவும்.  அதில்  கை  பொறுக்கும்  சூட்டில்  வெந்நீர் சேர்த்து  உதிர்த்துக்  கொள்ளவும்.  வெல்லத்தை  இளம்பாகாக்கி,  அதை  உதிர்த்த  மாவில்  சேர்த்துக்  கிளறவும். தேவையான  உளுத்தமாவு,  ஏலப்பொடி,  நெய்    சேர்த்து  பிசைந்து  வெல்லச்  சீடை  தயாரிக்கவும்.  சீடையின்  கலரும்  ருசியும்  சாப்பிடுபவரை  'ஆஹா'  போடவைக்கும்!   

வியாழன், 30 ஜனவரி, 2014

கருவடாம் பலவிதம்..



சாப்பாட்டுக்கு சுவை சேர்க்கிற மொறமொறப்பான வடாம்களைப் பார்ப்போமா?

ஜவ்வரிசி முத்து வடாம்

தேவையானவை:

ஜவ்வரிசி – 1 கிலோ
பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பொடிகள் – ஒவ்வொன்றும் சிட்டிகையளவு.

செய்முறை:

ஜவ்வரிசியை இரவு நன்கு களைந்து ஐந்து பாகங்களாகப் பிரித்து தனித்தனி பாத்திரங்களில் போடவும். தேவையான உப்பு, ஒவ்வொரு வண்ணப்பொடி கலந்து, ஜவ்வரிசி முழுகும் அளவு நீர் ஊற்றி வைக்கவும். ஒரு பாகத்தை கலர் சேர்க்காமல் வெண்மை நிறத்திலேயே ஊற வைக்கவும். மறு நாள் காலையில் உதிர் உதிராக இருக்கும். ஹார்லிக்ஸ், ஊறுகாய் பாட்டில் மூடிகளை எடுத்து நன்கு துடைத்து எண்ணெய் தடவவும். ஊறிய ஜவ்வரிசியை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பரப்பவும். கேஸில் குக்கரை வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கவும். இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டில் ஜவ்வரிசி நிரப்பிய மூடிகளை வைக்கவும். குக்கரை மூடி, வெயிட் போடாமல் வேகவிடவும். பிறகு பிளாஸ்டிக் பேப்பரை விரித்துப் போட்டு, அதில் மூடிகளை அழுத்தமாகத் தட்டினால் வெந்த கருவடாம் வட்டமாக விழும். வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். தனித்தனி வண்ணமாகவோ இரண்டு மூன்று வண்ணங்களைச் சேர்த்தோ மூடிகளில் பரப்பி செய்தால் அழகாக இருக்கும். எண்ணெயில் பொரித்தெடுக்க முத்து கருவடாம் தயார்.

மிக்ஸட் கலர் கருவடாம்

தேவையானவை:

மெல்லிய பம்பாய் ரவா – 1 கிலோ
பச்சை மிளகாய் – 20
பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்
வண்ணப் பொடிகள் – 2, 3 வண்ணம்

செய்முறை:

ரவையை காலையில் ஊற வைக்கவும். இரவு கையால் அழுத்திக் களைந்து சல்லடையில் வடிகட்டிப் பாலெடுக்கவும். மேலும் மூன்று முறை பாலெடுக்கவும். (கோதுமை அல்வாவுக்கு செய்வது போல்). பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி மூடி வைக்கவும். மறு நாள் காலை மேலே தெளிந்த நீரை இறுத்து விடவும். பாத்திரத்தில் 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். ஒரு கப் வெந்நீரை எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை நைஸாக அரைத்து, கொதிக்கும் வெந்நீரில் சேர்க்கவும். அதில் ரவாப் பாலை விட்டு கைவிடாமல் கிளறவும். தண்ணீர் போதாவிட்டால், எடுத்து வைத்த வெந்நீரை விட்டுக் கொள்ளவும். வெந்து கையில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். முதல் நாளிலிருந்து ஊறுவதால் அதில் புளிப்பு இருக்கும். மேலும் தேவையெனில் எலுமிச்சை சாறு பிழிந்து, ஓமப்பொடி தட்டில் வில்லைக் கருவடாம்களாகப் பிழியவும். வண்ணப் பொடிகளைத் தண்ணீர் விட்டுத் தனித்தனி கிண்ணங்களில் கரைத்து, இங்க் ஃபில்லரால் வடாமின் மூன்று பக்கமும் ஒவ்வொரு வண்ணத்தில் ஒரு சொட்டு விடவும். நன்கு காய வைத்து பொரிக்க ஒவ்வொரு வடாமும் கண்ணைப் பறிக்கும்.

தக்காளி கருவடாம்

தேவையானவை:

ஜவ்வரிசி – அரை கிலோ
தக்காளி – கால் கிலோ
பச்சை மிளகாய் – 12
பெருங்காயப் பொடி – அரை டீஸ்பூன்

செய்முறை:


வெந்நீரில் தக்காளியைப் போட்டு, தோல் உரித்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி சாறெடுக்கவும். ஜவ்வரிசியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, வேகவிட்டு கெட்டிக் கூழாக்கவும். அதில் தக்காளி சாறு, பச்சை மிளகாய் விழுது, பெருங்காயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் சிறு கரண்டியால் வடாம் இட்டு காயவைக்கவும். இளஞ்சிவப்பு நிற தக்காளி கருவடாம் மிக ருசியாக இருக்கும்.

உருளைக்கிழங்கு அல்வா

தேவையானவை:
உருளைக் கிழங்கு - ¼ கிலோ
சர்க்கரை -  300 கிராம்
நெய் – 150 கிராம்
முந்திரிப் பருப்பு – 10
ஏலக்காய்
பால் - ¼ கப்

செய்முறை:
உருளைக் கிழங்கை நன்கு அலம்பி, வேகவைத்து, தோலியை நீக்கி, மசிய அரைக்கவும். முந்திரியை பால் விட்டு அரைத்து உருளைக் கிழங்கு விழுதுடன் சேர்க்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் ½ கப் நீர் விட்டு, சர்க்கரையைப் போட்டு பாகு கம்பி பதம் வந்ததும், உருளைக் கிழங்கு விழுதைப் போட்டு அடி பிடிக்காமல் கிளறி நெய்யை விட்டு சுருண்டு வரும்வரை கிளறவும்.

கேசரிபவுடர், ஏலப்பொடி செய்து போட்டு அல்வா பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டு போடவும்.



சனி, 4 ஜனவரி, 2014

அங்காயப்பொடி

தேவை :
தனியா- 1/4 கப், மிளகு - 5 டீஸ்பூன், மிளகாய்  வற்றல்- 6, சீரகம்- 2 டீஸ்பூன்,   பெருங்காயம் சிறு துண்டு, வேப்பம்பூ -  1/8  கப்,  சுண்டை  வற்றல் -20,  மணத்தக்காளி  வற்றல் - 5 டீஸ்பூன், ஆய்ந்த கறிவேப்பிலை - 1/4  கப்,  சுக்கு - 1 சிறிய  துண்டு,  ஓமம் - 2 டீஸ்பூன்,  நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்
செய்முறை :  
வெறும்  வாணலியை  கேஸில்  வைத்துக்  காய்ந்ததும்  அதில்  வேப்பம்பூ  போட்டுக் கருநிறமாக வறுத்தெடுக்கவும். அதிலேயே சுண்டைக்காய் முதல் ஓமம்  வரைக் கொடுத்தவற்றை ஒவ்வொன்றாகப்   போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். 
தனியா, மிளகு, மிளகாய்  வற்றல், சீரகம்,  பெருங்காயம் ஆகியவற்றை 2 ஸ்பூன் எண்ணையில் வறுக்கவும்.
தேவையான  உப்பு   சேர்த்து மிக்ஸியில்   பொடி செய்யவும்.  
சாதத்தை ஆறவிட்டு ,  அதில் நல்லெண்ணெய்  சேர்த்து தேவையான  பொடி  சேர்த்து பிசையவும்.  நெய்யை  சுட   வைத்து  அதில் கடுகு, கறிவேப்பிலை  தாளித்து  சுட்ட  அல்லது பொரித்த அப்பளம், தயிர்ப் பச்சடியுடன்  சாப்பிடவும். 

இந்த  சாதம்  பிரசவித்த  பெண்களுக்கு அஜீரணம்   வாயு ஏற்படாமல்  தடுக்கும்.  தினமும் சிறிதளவு சாப்பிட   கைக்குழந்தைக்கு  மலச்சிக்கல்,  அஜீரணம்  வராது. பெரியவர்களுக்கும்  வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல்,  அஜீரணம்  ஏற்படும்போது  இந்த அங்காயப்பொடி சாதம்  சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும். நாம்  மறந்து  விட்ட   அந்நாளைய ஆரோக்கிய சமையலில்  இதுவும் ஒன்று.