சாப்பாட்டுக்கு சுவை சேர்க்கிற மொறமொறப்பான வடாம்களைப் பார்ப்போமா?
ஜவ்வரிசி முத்து வடாம்
தேவையானவை:
ஜவ்வரிசி – 1 கிலோ
பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பொடிகள் – ஒவ்வொன்றும் சிட்டிகையளவு.
செய்முறை:
ஜவ்வரிசியை இரவு நன்கு களைந்து ஐந்து பாகங்களாகப் பிரித்து தனித்தனி பாத்திரங்களில் போடவும். தேவையான உப்பு, ஒவ்வொரு வண்ணப்பொடி கலந்து, ஜவ்வரிசி முழுகும் அளவு நீர் ஊற்றி வைக்கவும். ஒரு பாகத்தை கலர் சேர்க்காமல் வெண்மை நிறத்திலேயே ஊற வைக்கவும். மறு நாள் காலையில் உதிர் உதிராக இருக்கும். ஹார்லிக்ஸ், ஊறுகாய் பாட்டில் மூடிகளை எடுத்து நன்கு துடைத்து எண்ணெய் தடவவும். ஊறிய ஜவ்வரிசியை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பரப்பவும். கேஸில் குக்கரை வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கவும். இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டில் ஜவ்வரிசி நிரப்பிய மூடிகளை வைக்கவும். குக்கரை மூடி, வெயிட் போடாமல் வேகவிடவும். பிறகு பிளாஸ்டிக் பேப்பரை விரித்துப் போட்டு, அதில் மூடிகளை அழுத்தமாகத் தட்டினால் வெந்த கருவடாம் வட்டமாக விழும். வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். தனித்தனி வண்ணமாகவோ இரண்டு மூன்று வண்ணங்களைச் சேர்த்தோ மூடிகளில் பரப்பி செய்தால் அழகாக இருக்கும். எண்ணெயில் பொரித்தெடுக்க முத்து கருவடாம் தயார்.
மிக்ஸட் கலர் கருவடாம்
தேவையானவை:
மெல்லிய பம்பாய் ரவா – 1 கிலோ
பச்சை மிளகாய் – 20
பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்
வண்ணப் பொடிகள் – 2, 3 வண்ணம்
செய்முறை:
ரவையை காலையில் ஊற வைக்கவும். இரவு கையால் அழுத்திக் களைந்து சல்லடையில் வடிகட்டிப் பாலெடுக்கவும். மேலும் மூன்று முறை பாலெடுக்கவும். (கோதுமை அல்வாவுக்கு செய்வது போல்). பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி மூடி வைக்கவும். மறு நாள் காலை மேலே தெளிந்த நீரை இறுத்து விடவும். பாத்திரத்தில் 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். ஒரு கப் வெந்நீரை எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை நைஸாக அரைத்து, கொதிக்கும் வெந்நீரில் சேர்க்கவும். அதில் ரவாப் பாலை விட்டு கைவிடாமல் கிளறவும். தண்ணீர் போதாவிட்டால், எடுத்து வைத்த வெந்நீரை விட்டுக் கொள்ளவும். வெந்து கையில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். முதல் நாளிலிருந்து ஊறுவதால் அதில் புளிப்பு இருக்கும். மேலும் தேவையெனில் எலுமிச்சை சாறு பிழிந்து, ஓமப்பொடி தட்டில் வில்லைக் கருவடாம்களாகப் பிழியவும். வண்ணப் பொடிகளைத் தண்ணீர் விட்டுத் தனித்தனி கிண்ணங்களில் கரைத்து, இங்க் ஃபில்லரால் வடாமின் மூன்று பக்கமும் ஒவ்வொரு வண்ணத்தில் ஒரு சொட்டு விடவும். நன்கு காய வைத்து பொரிக்க ஒவ்வொரு வடாமும் கண்ணைப் பறிக்கும்.
தக்காளி கருவடாம்
தேவையானவை:
ஜவ்வரிசி – அரை கிலோ
தக்காளி – கால் கிலோ
பச்சை மிளகாய் – 12
பெருங்காயப் பொடி – அரை டீஸ்பூன்
செய்முறை:
வெந்நீரில் தக்காளியைப் போட்டு, தோல் உரித்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி சாறெடுக்கவும். ஜவ்வரிசியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, வேகவிட்டு கெட்டிக் கூழாக்கவும். அதில் தக்காளி சாறு, பச்சை மிளகாய் விழுது, பெருங்காயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் சிறு கரண்டியால் வடாம் இட்டு காயவைக்கவும். இளஞ்சிவப்பு நிற தக்காளி கருவடாம் மிக ருசியாக இருக்கும்.