ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

சின்னச் சின்ன டிப்ஸ் !


 சமையலை  எளிதாக்க  சில  சின்னச்  சின்ன  டிப்ஸ் !

** ரசம்  மணமாக,  சுவையாக  இருக்க  வேண்டுமா?  ரசத்தில்  பருப்பு  ஜலம்  விட்டு  நுரைத்து  வரும்போதே   இறக்கிவிட  வேண்டும்.  கொதிக்க  விடக்  கூடாது. நெய்யில்  கடுகு  தாளிக்கும்போது  ஒரு  ஸ்பூன்  மிளகு  பொடியைப்  பொறித்து  சேர்த்தால்  எந்த  ரசமும் சூப்பர்தான்!


**வற்றல்  குழம்பு செய்யும்போது  நல்லெண்ணையில்  தாளித்து  அதிலேயே  தேவையான  சாம்பார்  போடி  போட்டு  வதக்கி  பின்  புளிஜலம்  சேர்த்து   குழம்பு  செய்தால்  தனி  வாசனையுடன்  ருசியும்  கூடுதலாக  இருக்கும்.

**வாழைக்காய்  பொடிமாஸ்  செய்யும்போது,  வேகவைத்த  வாழைக்காயை   உதிர்த்து  செய்யாமல்  கேரட்  துருவியில்  துருவி  சேர்த்தால்  கண்ணுக்கும்  விருந்து;  நாவுக்கும்  சுவை!  இத்துடன்  கேரட்டையும்  சீவிப்  போட்டு,  பச்சை  பட்டாணியை  வேக  வைத்து  சேர்க்க  மல்டி  கலர்  பொடிமாஸ்  உங்களுக்கு  பாராட்டை  வாங்கித்தரும்.

**வெல்லக்  கொழுக்கட்டைக்கு  மாவு கிளறுவது  பலருக்கும்  ஒரு  கடினமான  விஷயம். தண்ணீரைக்  கொதிக்க  வைத்து  அதில்  மாவை  அப்படியே  தூவி  செய்யும்போது  அது  கட்டி  தட்டிவிட்டால்  கொழுக்கட்டை  சொப்பு  செய்ய  வராது.  அரிசிமாவை  தண்ணீரில்  கெட்டியாகக்  கரைத்துக்கொண்டு , வாணலியில்  ஒரு  கரண்டி  நீரில்  சிட்டிகை   உப்பு,  ஒரு  ஸ்பூன்  பால்,    ஒரு  ஸ்பூன்   நல்லெண்ணெய்  சேர்த்து  கொதித்ததும்,  அதில்  கரைத்த  அரிசிமாவை  சேர்த்துக்  கைவிடாமல்  கிளறவும்.  கையில்  ஒட்டாத  பதம்  வந்ததும்  இறக்கி  ஒரு  பாத்திரத்தை  மேலே  கவிழ்த்து  மூடி  வைக்கவும்.  அரை  மணி  கழித்து  எண்ணையைக்  கையில்  தொட்டுக்  கொண்டு  நன்கு  பிசைந்து  கொழுக்கட்டை  சொப்பு  செய்தால்  விள்ளாமல்,  விரியாமல்  அருமையாக   செய்ய  வரும்.  மிக  சுலபமான  முறை  இது.

**மைசூர்பாகு  செய்யும்போது  கடலை  மாவை  பாகில்  அப்படியே  சேர்த்தால்  கட்டி  தட்ட     வாய்ப்புண்டு.  அதற்கு  பதிலாக  சிறிதளவு  நெய்யை  நன்கு  உருக்கி  அதில்  கடலை  மாவை  கலந்து  சேர்த்தால்  சுலபமாக  சேர்ந்து  கொள்ளும்.  நெய்யும்,  டால்டாவும்  சரியளவு  கலந்து  மைசூர்பாகு  செய்தால்  சுவையாக  இருக்கும்.

**கேசரிக்கு...வறுத்த  ரவையுடன்    வெந்நீரும், சிறிதளவு  சூடான  பாலும்  கலந்து  செய்தால்  சீக்கிரம்  வெந்து,  சுவையும்  கூடுதலாக   இருக்கும்.

**பருப்பு  உசிலிக்கு... ஒரு  கப்  துவரம்பருப்புடன்,  கால்  கப்  கடலைப்  பருப்பு  சேர்த்து  ஊறவைத்து,      மிளகாய்  வற்றல்,  உப்பு,  சேர்த்து  கெட்டியாக  அரைத்து   அதைக்  குக்கரில்  மூன்று  சத்தம்   வரும்வரை  வேகவிட்டு,  ஆறியதும்  மிக்சியில்  விப்பரில்  இருமுறை  சுற்றினால்  பூவாக  உதிர்ந்துவிடும்.  அதன்பின்  வாணலியில்  எண்ணெய்   விட்டு  உசிலி  செய்ய  சூப்பர்  டேஸ்டாக  இருக்கும்.

**வெல்லச்  சீடை.....இது  பலருக்கும்  சரியாக  வராத, காலை  வாரும்  ஒரு  பட்சணம்!  ஒன்று  உள்ளே வேகாது:  அல்லது  உதிர்ந்துவிடும். ஒரு  கப்  அரிசிக்கு  ஒரு  கப் வெல்லம்  என்ற  அளவில்  எடுத்துக்  கொள்ளவும். அரிசியை  நைசான  மாவாக  அரைத்து  வெறும்  வாணலியில்  சற்று  சிவக்க  வறுக்கவும்.  அதில்  கை  பொறுக்கும்  சூட்டில்  வெந்நீர் சேர்த்து  உதிர்த்துக்  கொள்ளவும்.  வெல்லத்தை  இளம்பாகாக்கி,  அதை  உதிர்த்த  மாவில்  சேர்த்துக்  கிளறவும். தேவையான  உளுத்தமாவு,  ஏலப்பொடி,  நெய்    சேர்த்து  பிசைந்து  வெல்லச்  சீடை  தயாரிக்கவும்.  சீடையின்  கலரும்  ருசியும்  சாப்பிடுபவரை  'ஆஹா'  போடவைக்கும்!   

3 கருத்துகள்:

  1. சின்னச்சின்ன டிப்ஸ் அனைத்தும் அழகு / அருமை. பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

    oooooooooo

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, வெல்லமாக இனிக்கும் செய்திகள் அத்தனையும் மனதுக்குள் நன்கு புகுந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்க வைக்கின்றன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா, ஒவ்வொன்றாக மீண்டும் படித்து ரஸித்து மகிழ்ந்தேன். ஏ.ஸி. ரூம் குளுமையுடன் இப்போது என் மனதும் ஜில்லென்று உள்ளது. நன்றியோ நன்றிகள்.

    பதிலளிநீக்கு