வெள்ளி, 31 ஜனவரி, 2020

ஹேஸல்நட்(Hazel nut) கேக்

ஆஷாட ஏகாதசிக்கு பண்டரிநாதனுக்கு பாயசத்துடன்  ஏதாவது ஸ்வீட் பண்ணலாமேனு யோசிச்சேன்!

என் பிள்ளை போனமுறை வந்தபோது ஜெர்மனியிலிருந்து வாங்கி வந்த ஹேஸல்நட் பவுடர் இருந்தது. இதை வைத்து ஒரு கேக் பண்ணலாமென்று முடிவு செய்தேன்.

ஹேஸல்நட் என்பது  கொண்டைக்கடலை மாதிரி பெரியதாக இருக்கும். மிக சத்தானது என்பான் என் பிள்ளை.

வெளிநாடுகளில்  மட்டுமே இதை நான் பார்த்ததுண்டு. பாதாம், மிந்திரி, பிஸ்தா, வால்நட் போல் இதில் சாக்லேட், பிஸ்கட் எல்லாம் செய்வார்கள்.

ஆனால் இதில் நம்ம மெதட்ல கேக் பண்ணினா எப்படி இருக்குமோ என்று உள்ளூர பயம்!

கசக்குமோ..துவர்க்குமோ?  கண்ணனை வேண்டிக் கொண்டு கேக் பண்ணி நைவேத்யமும் பண்ணிவிட்டு சாப்பிட்டோம். அருமையாக இருந்தது!

Hazelnutற்கு தமிழ்ப் பெயர் தெரியவில்லை. Googleலும் சரியான பெயர் கண்டுபிடிக்க முடியவில்லை! எப்படியோ பாண்டுரங்கனுக்கு ஒரு புதிய இனிப்பு பண்ணி கொடுத்தாச்சு!

தேவை
ஹேஸல்நட் மாவு..1கப்
தேங்காய் துருவல்1கப்
நெய்..1கப்
பால்..1கப்
சர்க்கரை..3கப்
ஏலப்பொடி..1டீஸ்பூன்

செய்முறை
கடலைமாவை வாணலியில் லேசாக வறுக்கவும்.சிவக்கக் கூடாது.

அத்துடன் ஹேஸல்நட் மாவு, பால், நெய்,சர்க்கரை இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கவும்.

கேஸை சிம்மில் வைத்து நன்கு கலந்து கைவிடாமல் கிளறவும்.

நன்கு பூத்து வந்து ஒட்டாமல் சுருண்டு வரும்போது ஏலப்பொடி சேர்க்கவும்.

மிந்திரி தேவையெனில் நெய்யில் வறுத்து சேர்க்கவும். தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.

இதில் ஹேஸல்நட்டுக்கு பதிலாக பாதாம் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.







வியாழன், 30 ஜனவரி, 2020

அக்காரவடிசில்


தேவை
அரிசி – 1 கப்
பயத்தம் பருப்பு – 1/4 கப்
வெல்லம் – 2  1/2 கப்
ஏலப்பொடி – 2 டீஸ்பூன்
மிந்திரி --10
பால்...6 கப்
நெய்…1 கப்

செய்முறை:
அரிசி மற்றும் பயத்தம் பருப்பைக் களைந்து, நன்கு நீரை வடித்துவிட்டு, வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

பின் 3கப் பால் + 2கப் நீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும்.

வாணலியில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும்.

வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக் கரைசலுடன் மேலும் 2 கப் பால் சேர்த்து சிறுதீயில் கிளற ஆரம்பிக்க வேண்டும்.

இறுக இறுக மீதமுள்ள பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

சிறிது நேரம் சென்றபின் நெய்யைச் சேர்க்க வேண்டும். நெய் பிரிய கிளறி இறக்கி, ஏலப்பொடி, நெய்யில் வறுத்த மிந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

புதன், 8 ஜனவரி, 2020

ரவை கிச்சடி


தேவை
 ரவை  -1  கப்
பட்டை -1
கிராம்பு -1
ஏலக்காய் -1
வெங்காயம் -1
தக்காளி -1
கேரட் -1
பீன்ஸ் -5
பச்சை பட்டாணி -1 /2 கப்
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன்(தேவையெனில்)
பச்சைமிளகாய் -3
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
கரம் மசாலா -1 1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தண்ணீர் -3 1/2கப்
நெய் 1ஸ்பூன்
கொத்தமல்லி இலை -சிறிது
கறிவேப்பிலை 
செய்முறை
காய்கறி நீளவாக்கில் நறுக்கவும்.
வாணலியில் நெய் சேர்த்து  ரவையை  வறுத்துக்கொள்ளவும்.
வாணலியில் நெய்  ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது போட்டு சற்று வதக்கி தக்காளி சேர்க்கவும்.
காய்கறி போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள்தூள்,  கரம் மசாலா சேர்த்து வதக்கி தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
காய்கறி  வெந்தவுடன் 11/2கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் ரவையைப்  போட்டு கிளறி வேகவிடவும். ரவை வெந்தவுடன் கொத்தமல்லி,கறிவேப்பிலை  தூவி இறக்கவும்.

செவ்வாய், 7 ஜனவரி, 2020

அவல் ஸ்வீட் பொங்கல்


தேவையான பொருட்கள்:
அவல் - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 150 கிராம்
ஏலக்காய் - 6
கிஸ்மிஸ் பழம் - 20
தேங்காய் பால் - 1 டம்ளர்(200 மி.லி)
காய்ச்சிய பால் - 1 டம்ளர்(200 மி.லி)
தேங்காய் சில்(பொடியாக நறுக்கியது - 1 கப்
நெய் - 100 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
* வெல்லத்தை பொடித்து தண்ணீரில் கலந்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
* பாசிப்பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளவும்.
* அவலை வெந்நீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
* வெட்டி வைத்திருக்கும் தேங்காய் சில்-லில் பாதியை நெய்யில் வறுத்து ஆற வைக்கவும்.
* வெந்த பாசிப்பருப்புடன், ஊறவைத்து அவலை சேர்க்கவும். அதனுடன் வெல்லப்பாகு கலந்து, பால், தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
* அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். மறக்காமல் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். உப்பு அதிகமாக சேர்த்து விடக் கூடாது.
* நன்கு குழைந்து பொங்கல் பதத்துக்கு வந்தவுடன், இறக்கி நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம், வறுத்த தேங்காய், மீதமுள்ள தேங்காய் சில், நெய் ஊற்றி கிளறி விடவும்.
* நெய் மணத்துடன் கமகமக்கும் சுவையான அவல் பொங்கல் தயார்.