சனி, 8 பிப்ரவரி, 2014

பாதாம் குக்கீஸ்

தேவை
பாதாம் பவுடர்  - 150 கி. 

வெண்ணை - 200கி. 

மைதா -  300கி. 

முட்டை -2  

சர்க்கரை -75கி. 

வெனிலா எசன்ஸ் - 5-6  

உப்பு - 1 சிட்டிகை

மேலே தூவ பூரா சர்க்கரை - 50 கி.

செய்முறை
பாதாம் பவுடர் கிடைக்காவிடில் முழு பாதாம்களை வெந்நீரில் சற்று  ஊறவைத்து தோலி  நீக்கி நன்கு காயவைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும். 

பாதாம் பவுடர், மைதா,உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். 

அத்துடன் வெண்ணை, மஞ்சள் கரு, வெனிலா எசன்ஸ் கலந்து நன்கு பிசையவும். 

பிசைந்த மாவை அரை அடி நீளத்திற்கு சற்று கனமாக உருட்டி, பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

 

அதனை எடுத்து கத்தியால் சிறு வட்டங்களாக , அரை வட்டங்களாக, வேண்டிய வடிவங்களிலோ வெட்டவும்.


கேக் செய்யும் ஓவனை ப்ரிஹீட் செய்து, 150 டிகிரி cயில் 20-25 நிமிடங்கள் பேக் செய்யவும். வெளியில் எடுத்து மேலே பூரா சர்க்கரையை தூவி, ஆறியதும் எடுத்து வைக்கவும்.

இதையே பாதியளவு மிந்திரி பவுடர் சேர்த்தும் செய்யலாம்.

                                       சுலபமான, சுவையான குக்கீஸ் ரெடி!

  

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

பருப்பு பொடி

தேவை
துவரம்பருப்பு-- 1 கப் 

கடலைப்  பருப்பு--- 1/4 கப் 

மிளகாய்  வற்றல்-- 2 

மிளகு--  2 தேக்கரண்டி 

உப்பு--- தேவையான  அளவு

செய்முறை
துவரம்பருப்பு  மற்றும்  கடலைப்  பருப்பை  வெறும்  வாணலியில்  எண்ணையில்லாமல் சிவக்க  வறுக்கவும்.

பாதி  வறுக்கும்போதே  மிளகு,  மிளகாய்  வற்றலையும்  சேர்த்துக்  கொள்ளவும். 

இறக்கி  ஆறியதும் தேவையான  உப்பு  சேர்த்து மிக்ஸியில்  கரகரப்பாக  பொடி  செய்யவும்.  ரொம்ப நைஸாக  இருக்கக்  கூடாது. 

சாதத்தில்  நல்லெண்ணையோ,  நெய்யோ  சேர்த்து  இந்த  பருப்புப் பொடி  போட்டு  கலந்து  மோர்க் குழம்பு,  அப்பளத்துடன்  சாப்பிடவும்.  

இதில் பெருங்காயம் சேர்ப்பதில்லை. விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

சின்னச் சின்ன டிப்ஸ் !


 சமையலை  எளிதாக்க  சில  சின்னச்  சின்ன  டிப்ஸ் !

** ரசம்  மணமாக,  சுவையாக  இருக்க  வேண்டுமா?  ரசத்தில்  பருப்பு  ஜலம்  விட்டு  நுரைத்து  வரும்போதே   இறக்கிவிட  வேண்டும்.  கொதிக்க  விடக்  கூடாது. நெய்யில்  கடுகு  தாளிக்கும்போது  ஒரு  ஸ்பூன்  மிளகு  பொடியைப்  பொறித்து  சேர்த்தால்  எந்த  ரசமும் சூப்பர்தான்!


**வற்றல்  குழம்பு செய்யும்போது  நல்லெண்ணையில்  தாளித்து  அதிலேயே  தேவையான  சாம்பார்  போடி  போட்டு  வதக்கி  பின்  புளிஜலம்  சேர்த்து   குழம்பு  செய்தால்  தனி  வாசனையுடன்  ருசியும்  கூடுதலாக  இருக்கும்.

**வாழைக்காய்  பொடிமாஸ்  செய்யும்போது,  வேகவைத்த  வாழைக்காயை   உதிர்த்து  செய்யாமல்  கேரட்  துருவியில்  துருவி  சேர்த்தால்  கண்ணுக்கும்  விருந்து;  நாவுக்கும்  சுவை!  இத்துடன்  கேரட்டையும்  சீவிப்  போட்டு,  பச்சை  பட்டாணியை  வேக  வைத்து  சேர்க்க  மல்டி  கலர்  பொடிமாஸ்  உங்களுக்கு  பாராட்டை  வாங்கித்தரும்.

**வெல்லக்  கொழுக்கட்டைக்கு  மாவு கிளறுவது  பலருக்கும்  ஒரு  கடினமான  விஷயம். தண்ணீரைக்  கொதிக்க  வைத்து  அதில்  மாவை  அப்படியே  தூவி  செய்யும்போது  அது  கட்டி  தட்டிவிட்டால்  கொழுக்கட்டை  சொப்பு  செய்ய  வராது.  அரிசிமாவை  தண்ணீரில்  கெட்டியாகக்  கரைத்துக்கொண்டு , வாணலியில்  ஒரு  கரண்டி  நீரில்  சிட்டிகை   உப்பு,  ஒரு  ஸ்பூன்  பால்,    ஒரு  ஸ்பூன்   நல்லெண்ணெய்  சேர்த்து  கொதித்ததும்,  அதில்  கரைத்த  அரிசிமாவை  சேர்த்துக்  கைவிடாமல்  கிளறவும்.  கையில்  ஒட்டாத  பதம்  வந்ததும்  இறக்கி  ஒரு  பாத்திரத்தை  மேலே  கவிழ்த்து  மூடி  வைக்கவும்.  அரை  மணி  கழித்து  எண்ணையைக்  கையில்  தொட்டுக்  கொண்டு  நன்கு  பிசைந்து  கொழுக்கட்டை  சொப்பு  செய்தால்  விள்ளாமல்,  விரியாமல்  அருமையாக   செய்ய  வரும்.  மிக  சுலபமான  முறை  இது.

**மைசூர்பாகு  செய்யும்போது  கடலை  மாவை  பாகில்  அப்படியே  சேர்த்தால்  கட்டி  தட்ட     வாய்ப்புண்டு.  அதற்கு  பதிலாக  சிறிதளவு  நெய்யை  நன்கு  உருக்கி  அதில்  கடலை  மாவை  கலந்து  சேர்த்தால்  சுலபமாக  சேர்ந்து  கொள்ளும்.  நெய்யும்,  டால்டாவும்  சரியளவு  கலந்து  மைசூர்பாகு  செய்தால்  சுவையாக  இருக்கும்.

**கேசரிக்கு...வறுத்த  ரவையுடன்    வெந்நீரும், சிறிதளவு  சூடான  பாலும்  கலந்து  செய்தால்  சீக்கிரம்  வெந்து,  சுவையும்  கூடுதலாக   இருக்கும்.

**பருப்பு  உசிலிக்கு... ஒரு  கப்  துவரம்பருப்புடன்,  கால்  கப்  கடலைப்  பருப்பு  சேர்த்து  ஊறவைத்து,      மிளகாய்  வற்றல்,  உப்பு,  சேர்த்து  கெட்டியாக  அரைத்து   அதைக்  குக்கரில்  மூன்று  சத்தம்   வரும்வரை  வேகவிட்டு,  ஆறியதும்  மிக்சியில்  விப்பரில்  இருமுறை  சுற்றினால்  பூவாக  உதிர்ந்துவிடும்.  அதன்பின்  வாணலியில்  எண்ணெய்   விட்டு  உசிலி  செய்ய  சூப்பர்  டேஸ்டாக  இருக்கும்.

**வெல்லச்  சீடை.....இது  பலருக்கும்  சரியாக  வராத, காலை  வாரும்  ஒரு  பட்சணம்!  ஒன்று  உள்ளே வேகாது:  அல்லது  உதிர்ந்துவிடும். ஒரு  கப்  அரிசிக்கு  ஒரு  கப் வெல்லம்  என்ற  அளவில்  எடுத்துக்  கொள்ளவும். அரிசியை  நைசான  மாவாக  அரைத்து  வெறும்  வாணலியில்  சற்று  சிவக்க  வறுக்கவும்.  அதில்  கை  பொறுக்கும்  சூட்டில்  வெந்நீர் சேர்த்து  உதிர்த்துக்  கொள்ளவும்.  வெல்லத்தை  இளம்பாகாக்கி,  அதை  உதிர்த்த  மாவில்  சேர்த்துக்  கிளறவும். தேவையான  உளுத்தமாவு,  ஏலப்பொடி,  நெய்    சேர்த்து  பிசைந்து  வெல்லச்  சீடை  தயாரிக்கவும்.  சீடையின்  கலரும்  ருசியும்  சாப்பிடுபவரை  'ஆஹா'  போடவைக்கும்!   

வியாழன், 30 ஜனவரி, 2014

கருவடாம் பலவிதம்..



சாப்பாட்டுக்கு சுவை சேர்க்கிற மொறமொறப்பான வடாம்களைப் பார்ப்போமா?

ஜவ்வரிசி முத்து வடாம்

தேவையானவை:

ஜவ்வரிசி – 1 கிலோ
பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பொடிகள் – ஒவ்வொன்றும் சிட்டிகையளவு.

செய்முறை:

ஜவ்வரிசியை இரவு நன்கு களைந்து ஐந்து பாகங்களாகப் பிரித்து தனித்தனி பாத்திரங்களில் போடவும். தேவையான உப்பு, ஒவ்வொரு வண்ணப்பொடி கலந்து, ஜவ்வரிசி முழுகும் அளவு நீர் ஊற்றி வைக்கவும். ஒரு பாகத்தை கலர் சேர்க்காமல் வெண்மை நிறத்திலேயே ஊற வைக்கவும். மறு நாள் காலையில் உதிர் உதிராக இருக்கும். ஹார்லிக்ஸ், ஊறுகாய் பாட்டில் மூடிகளை எடுத்து நன்கு துடைத்து எண்ணெய் தடவவும். ஊறிய ஜவ்வரிசியை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பரப்பவும். கேஸில் குக்கரை வைத்து தண்ணீர் விட்டு சூடாக்கவும். இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டில் ஜவ்வரிசி நிரப்பிய மூடிகளை வைக்கவும். குக்கரை மூடி, வெயிட் போடாமல் வேகவிடவும். பிறகு பிளாஸ்டிக் பேப்பரை விரித்துப் போட்டு, அதில் மூடிகளை அழுத்தமாகத் தட்டினால் வெந்த கருவடாம் வட்டமாக விழும். வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கவும். தனித்தனி வண்ணமாகவோ இரண்டு மூன்று வண்ணங்களைச் சேர்த்தோ மூடிகளில் பரப்பி செய்தால் அழகாக இருக்கும். எண்ணெயில் பொரித்தெடுக்க முத்து கருவடாம் தயார்.

மிக்ஸட் கலர் கருவடாம்

தேவையானவை:

மெல்லிய பம்பாய் ரவா – 1 கிலோ
பச்சை மிளகாய் – 20
பெருங்காயப் பொடி – 1 டீஸ்பூன்
வண்ணப் பொடிகள் – 2, 3 வண்ணம்

செய்முறை:

ரவையை காலையில் ஊற வைக்கவும். இரவு கையால் அழுத்திக் களைந்து சல்லடையில் வடிகட்டிப் பாலெடுக்கவும். மேலும் மூன்று முறை பாலெடுக்கவும். (கோதுமை அல்வாவுக்கு செய்வது போல்). பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி மூடி வைக்கவும். மறு நாள் காலை மேலே தெளிந்த நீரை இறுத்து விடவும். பாத்திரத்தில் 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும். ஒரு கப் வெந்நீரை எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தை நைஸாக அரைத்து, கொதிக்கும் வெந்நீரில் சேர்க்கவும். அதில் ரவாப் பாலை விட்டு கைவிடாமல் கிளறவும். தண்ணீர் போதாவிட்டால், எடுத்து வைத்த வெந்நீரை விட்டுக் கொள்ளவும். வெந்து கையில் ஒட்டாமல் வந்ததும் இறக்கவும். முதல் நாளிலிருந்து ஊறுவதால் அதில் புளிப்பு இருக்கும். மேலும் தேவையெனில் எலுமிச்சை சாறு பிழிந்து, ஓமப்பொடி தட்டில் வில்லைக் கருவடாம்களாகப் பிழியவும். வண்ணப் பொடிகளைத் தண்ணீர் விட்டுத் தனித்தனி கிண்ணங்களில் கரைத்து, இங்க் ஃபில்லரால் வடாமின் மூன்று பக்கமும் ஒவ்வொரு வண்ணத்தில் ஒரு சொட்டு விடவும். நன்கு காய வைத்து பொரிக்க ஒவ்வொரு வடாமும் கண்ணைப் பறிக்கும்.

தக்காளி கருவடாம்

தேவையானவை:

ஜவ்வரிசி – அரை கிலோ
தக்காளி – கால் கிலோ
பச்சை மிளகாய் – 12
பெருங்காயப் பொடி – அரை டீஸ்பூன்

செய்முறை:


வெந்நீரில் தக்காளியைப் போட்டு, தோல் உரித்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி சாறெடுக்கவும். ஜவ்வரிசியை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, வேகவிட்டு கெட்டிக் கூழாக்கவும். அதில் தக்காளி சாறு, பச்சை மிளகாய் விழுது, பெருங்காயப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிளாஸ்டிக் பேப்பரில் சிறு கரண்டியால் வடாம் இட்டு காயவைக்கவும். இளஞ்சிவப்பு நிற தக்காளி கருவடாம் மிக ருசியாக இருக்கும்.