திங்கள், 16 மே, 2016

ரசப்பொடி

சில பொதுக் குறிப்புகள்
எல்லாவகை ரசத்திற்கான சில பொதுக் குறிப்புகள்:

எல்லா ரசத்திற்கும் நெய்யில் கடுகு தாளித்தால் வாசனையாக இருக்கும்.

ரசம் நுரைத்துப் பொங்கிவரும் சமயம் இறக்கிவிட வேண்டும். கொதிக்க விடக்கூடாது.

தக்காளி, பருப்பு, எலுமிச்சை ரசங்களுக்கு நெய்யில் கடுகு தாளிக்கும்போது ½ டீஸ்பூன் மிளகு, சீரகப்பொடி பொரித்துப்போட ரசம் மணக்கும்! கடைசியில் கொத்துமல்லி கிள்ளிப்போட வேண்டியது அவசியம்!

மிளகு, சீரகம், கணடந்திப்பிலி, பூண்டு ரசங்களுக்குக் கண்டிப்பாக கருவேப்பிலை சேர்த்தாலே சுவை கூடும்.

உப்பு, காரம் அவரவரக்குத் தேவைப்படி கூட்டியோ, குறைத்தோ சேர்க்கவும்.

ரசங்களுக்கு ரசப்பொடி தனியே தயாரித்து வைத்துப் போட்டால் அதன் சுவை, மணம், ருசி அனைத்துமே ஸ்பெஷல்தான்! இதனால் அடிவண்டி தங்காது. சாம்பார் பொடி சேர்த்தால் ரசம் கூழாகி சுவை மாறிவிடும்.

எந்த ரசமானாலும் 4 கப்பிற்கு 1/5  கப் துவரம் பருப்பே போதுமானது. அதிகம் சேர்த்தால் ரசம் கூழாகிவிடும்.

நம் தென்னிந்திய உணவில் ரசத்திற்குத் தனியிடம் உண்டு. ரசத்தை சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவதோடு, டம்ளரில் அப்படியே குடிப்பவர்களே அதிகம்! ரசம் செய்வது சுலபம். எனினும் அதற்கான சாமான்களின் அளவு முறையே ருசியான ரசத்தின் மூல காரணம். முற்காலத்தில் ஈயப் பாத்திரத்தில் வைக்கப்படும் ரசமே ருசியாக இருக்கும் என்ற கருத்து இருப்பினும், தற்காலத்தில் ஈயம் உடலுக்கு தீமை விளைவிக்கும் என்ற காரணத்தால் அடிகனமான காப்பர் பாட்டம் பாத்திரங்களே ரசம் செய்ய ஏற்றவை.

ரசப்பொடி செய்முறை

தேவை

தனியா - ¼ கிலோ
துவரம் பருப்பு – 50 கிராம்
மிளகு – 100 கிராம்
சீரகம் – 100 கிராம்
மிளகாய் வற்றல் – 50 கிராம்
மஞ்சள் பொடி – சிறிது
கடலைப் பருப்பு – 25 கிராம்
பெருங்காயம் – 25 கிராம்

செய்முறை

மஞ்சள் பொடி, பெருங்காயம் தவிர மற்ற சாமான்களை வெறும் வாணலியில் சூடுவர வறுக்கவும். கருவேப்பிலையை சிறிதளவு மொறுமொறுப்பாக வறுக்கவும். பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்தெடுத்து எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கரகரப்பாக அரைக்கவும்.

மிளகு ரசப்பொடி

மிளகு - ½ கப்
சீரகம் - ½ கப்
துவரம் பருப்பு - ¼ கப்
மிளகாய் வற்றல் – 5
பெருங்காயம் – சிறிது
கருவேப்பிலை – 1 பிடி
எல்லாவற்றையும் வாணலியில் பிரட்டி மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடி செய்யவும்.

மைசூர் ரசப்பொடி

கடலைப் பருப்பு - ¼ கப்
தனியா - ½ கிலோ
மிளகாய் வற்றல் – 10
மிளகு - ¼ கப்
பெருங்காயம் – ஒரு துண்டு
மேலே கூறிய சாமான்களை எண்ணெயில் சிவக்க வறுத்துப் பொடி செய்யவும். ரசம் செய்யும்போது சிவக்க வறுத்த தேங்காய்த் துருவலை தேவையான அளவு சேர்த்து அரைத்துவிடலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக