செவ்வாய், 31 மே, 2016

தேங்காய் பால் பட்டாணி பிரியாணி

தேவை 
பாசுமதி அரிசி – 1 கப்
பட்டாணி – 1/2 கப்
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி -  2 (பொடியாக நறுக்கியது)
கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி  - சிறுதுண்டு  
மிளகாய் பொடி  – 1 டீஸ்பூன்
தனியாபொடி  - 1 டீஸ்பூன்
பூண்டு  - 3 பற்கள்
தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

தாளிப்பதற்கு…
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 2
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2

செய்முறை
முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, களைந்து வடிய வைக்கவும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளி சேர்க்கவும்.

தக்காளி நன்கு குழைய வெந்து சேர்ந்து கொண்டபின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக எண்ணெய் பிரியும்வரை நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் பட்டாணி, தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி ஆவி வந்தபின் வெயிட் போட்டு  சிம்மில் வைக்கவும்.

பத்து நிமிடம் கழித்து, குக்கரைத் திறந்து சாதத்தை நன்கு கிளறிவிட்டு, மேலே முந்திரி வறுத்து சேர்த்து, கொத்துமல்லி பொடியாக நறுக்கிப் போட்டு அப்பளம் மற்றும் ராய்த்தாவுடன் பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக