ஞாயிறு, 8 மே, 2016

வெஜிடபிள் உருண்டை கொழுக்கட்டை

தேவை
பச்சை அரிசியை மிக்ஸியில் மெல்லிய ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.

உடைத்த ரவை - ஒரு கப்

பொடியாக நறுக்கிய காய்கறிகள் (கோஸ், கேரட், காலிஃப்ளவர், பீன்ஸ், பட்டாணி, உருளைக் கிழங்கு) - ஒரு கப்

                        




ஊற வைத்து அரைக்க:     
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1½ தேக்கரண்டி

துவரம்பருப்பு - 2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2 அல்லது 3

மேற்கண்ட சாமான்களை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

தேங்காய்த் துருவல் - ½ கப்

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி

நெய் - 4 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறு துண்டு அல்லது ¼ தேக்கரண்டி பெருங்காயப் பொடி

கடுகு - 2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1½ தேக்கரண்டி

கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 2 கொத்து



செய்முறை
வாணலியில் 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெயும், 2 தேக்கரண்டி நெய்யும் ஊற்றி காய்ந்ததும், அதில் பெருங்காயம் போட்டு பொரிந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு போட்டு சிவந்ததும், மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் கிள்ளிப் போட்டு வறுப்பட்டதும், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.


காய்கறிகள் வதங்கியதும் 2½ கப் தண்ணீர் விடவும்.தண்ணீர் நன்கு கொதித்ததும் தேவையான அளவு உப்பு போடவும்.அதில் அரைத்த பருப்பு கலவையையும், தேங்காய் துருவலையும் போட்டு நன்கு கிளறவும்.


 

மீதமுள்ள 2 தேக்கரண்டி நெய்யையும் விட்டு நன்கு கிளறி இறக்கி வைத்து, ஒரு தட்டினால் அழுத்தி மூடி வைக்கவும். சற்று ஆறியதும் வெந்த உப்புமாவை நன்கு கையால் பிசைந்து, நீள உருண்டைகளாக உருட்டவும்.

 

குக்கரில் இட்லித்தட்டில் உருண்டைகளை வைத்து மேலே வெயிட் போட்டு 4 சத்தங்கள் வரும் வரை வேக விடவும்.வெளியில் எடுத்து தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

  •  தக்காளி சட்னி செய்முறை:
    எண்ணெயில் துளி பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் வறுத்து, பின்பு தக்காளியையும் நன்கு வதக்கி, இத்துடன் தேவையான உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். இதற்கு புளி தேவையில்லை. மிளகாய் வற்றலும் அதிகம் வைக்க வேண்டாம். 4 தக்காளிக்கு ஒரு மிளகாய் வற்றலே போதுமானது.

    இது பழைய நாளைய டிஃபன் எனினும் சுவையானது, ஆரோக்கியமானது. நாம் மறந்துவிட்ட இவ்வகை உணவுகள் தற்சமயம் பல பெரிய ஹோட்டல்களின் மெனுவில் காணப்படுகிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக